பிரெக்சிட்: அணிதிரட்டும் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரெக்சிட்: அணிதிரட்டும் பிரதமர் போரிஸ் ஜான்சன்

2 mins read
fe0915a9-53af-490c-9a02-90f9deaea74a
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உருவ பொம்மை. (படம்: ஏஎஃப்பி) -

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரச்சினை முக்கியமான ஒன்றாக உருவெடுத்துவரும் நிைலயில், தமது கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டுக்கு புறப்பட்டுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன். திரு ஜான்சனுக்கு நாடாளுமன்றத்தில் பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், அவர் அடுத்த மாதம் 31ஆம் தேதி உடன்பாடு ஏற்படுகிறதோ இல்லையோ பிரட்டனை ஒன்றியத்திலிருந்து வெளியே கொண்டு வந்து விடுவேன் என சூளுரைத்துள்ளார்.

இதன் தொடர்பில், பிரட்டிஷ் நாடாளுமன்றம் உடன்பாடின்றி ஒன்றியத்திலிருந்து வெளியேறக்கூடாது என சட்டம் இயற்றியுள்ளதால் அவருடைய இந்தக் கூற்று அவரை நாடாளுமன்றத்துடன் முட்டி மோதும் நிலையை உருவாக்கியுள்ளது.

ஆனால், பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேறியே ஆகவேண்டும் என விடாப்பிடியாக இருக்கும் அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவரின் இந்த நிலைப்பாடு ஆதரவைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும், குறிப்பாக அவருடைய கன்சர்வேட்டிவ் கட்சி ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கக் காத்திருப்பதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன. எனினும், மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ள இந்த நான்கு நாள் மாநாடு நாடாளுமன்ற அலுவல்களால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கேள்விகளைப் புறந்தள்ளும் போரிஸ்

.முன்னதாக, திரு போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றக் கூட்டங்களை ரத்து செய்தது உறுப்பினர்களிடையே ஆத்திரத்தை மூட்டியது. அவரின் இந்த நடவடிக்கையை பிரட்டனின் உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியதால் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

எனினும், அவர் நாடாளுமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக புதன்கிழமையன்று கட்சி மாநாட்டில் சிறப்புரை ஆற்றவிருப்பது அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்துவதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அடுத்த மாதம் 31ஆம் தேதிக்குள் பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேற முடியாவிட்டால் அதை செய்து முடிப்பதற்கு கால அவகாசம் கேட்க வேண்டியிருக்கும். ஆனால், எப்படியும் அந்தத் தேதிக்குள் ஒன்றியத்திலிருந்து வெளியேறுவேன் எனக் கூறியிருக்கும் திரு ஜான்சனிடம் கால அவகாசம் கேட்பதைத் தவிர்க்க நீங்கள் பதவி விலகுவீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு அப்படி செய்யமாட்டேன் எனக் கூறியுள்ளார்.

"நாட்டின் சிரமமான காலகட்டத்தில் அதை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளேன். அதை நான் தொடர்ந்து செய்வேன்.

"அது எனது கடமை என நான் நம்புகிறேன்," என்று அவர் விளக்கியுள்ளார்