ஈரானைத் தடுக்க உலகம் ஒன்றுசேர்ந்து முயற்சி எடுக்காவிட்டால், எண்ணெய் விலை "நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உயரக்கூடும்" என சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் ஞாயிறன்று ஒளிபரப்பான பேட்டியில் எச்சரித்திருக்கிறார். இருந்தாலும், ராணுவத் தீர்வைவிட அரசியல் தீர்வையே தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிபிஎஸ் தொலைக்காட்சியின் "60 நிமிடங்கள்" நிகழ்ச்சியில் பேசிய முகம்மது பின் சல்மான், கிட்டத்தட்ட ஓராண்டுக்குமுன் செய்தியாளர் ஜமால் கஷோகியைக் கொலை செய்யத் தான் உத்தரவிடவில்லை என்றும் கூறினார். இருந்தாலும், தனது நாட்டின் தலைவர் என்ற முறையில், "முழுப் பொறுப்பு" ஏற்பதாக அவர் சொன்னார்.
கஷோகியின் மரணத்தால் பட்டத்து இளவரசரின் நன்மதிப்பு குலைந்தபோதிலும், சவூதியின்பால் அமெரிக்கா அண்மை காலமாக நிலைநாட்டிவரும் கொள்கையில், டிரம்ப் நிர்வாகத்திற்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் பதற்றநிலையே ஆதிக்கம் செலுத்தி வருகிறது, குறிப்பாக சவூதியின் எண்ணெய் ஆலையில் செப்டம்பர் 14ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு.
"ஈரானைத் தடுக்க உலகம் வலுவான, உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், உலகின் நலனுக்கு மிரட்டலாக இருக்கக்கூடிய வகையில் நிலைமை மேலும் மோசமடையும். எண்ணெய் விநியோகம் தடைப்பட்டு, எண்ணெய் விலைகள் நம் வாழ்க்கையில் நாம் இதுவரை பார்த்திராத அளவுக்கு வெகுவாக உயரக்கூடும்," என்றார் பட்டத்து இளவரசர்.

