ஜெனீவா: மத்திய ஆப்பிரிக்க நாடான எக்குவடோரியல் கினியின் துணை அதிபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள 25 சூப்பர் கார்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நடந்த இந்த ஏலத்தின்மூலம் கிட்டத்தட்ட 27 மில்லியன் சுவிஸ் பிராங்க் (S$37.51 மில்லியன்) வசூலிக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட 'லம்போர்கினி வெனேனோ ரோட்ஸ்டர்' ரக கார் மட்டும், 8.28 மில்லியன் பிராங்க்குக்கு விற்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கார்களில் இந்த ரக காரே ஆக அரிது என்றார் ஏலத்தைத் திறந்துவைத்த போன்ஹம்ஸ் மோட்டாரிங் டிபார்ட்மண்ட் குழுமத்தின் தலைவர் ஜேம்ஸ் நைட்.
இந்த காரை வாங்கியவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. ஆனால் ஏலத்தில் காரின் விற்பனை உறுதிசெய்யப்பட்டபோது அரங்கில் கரவொலி நிரம்பியது.
2011அம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட 'ஏஸ்டன் மார்டின் ஒன்-77 கூப்' ரக கார், 1.55 மில்லியன் பிராங்க்ஸுக்கு விற்கப்பட்டது. வசூலிக்கப்பட்ட பணம் நன்கொடை அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்று திரு நைட் கூறினார்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதன் தொடர்பில் எக்குவடோரியல் கினியின் துணை அதிபர் டியோடொரோ குவேமா ஓபியாங் மீதான விசாரணை நிறைவேறிய பிறகு அவரது கார்களுக்கான ஏலம் நடத்தப்படும் என்று ஜெனிவாவைச் சேர்ந்த அரசுதரப்பு வழக்கறிஞர்கள் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தனர்.
துணை அதிபர் ஓபியாங், எக்குவடோரியல் கினியின் அதிபர் டியோரோ ஓபியாங் குவேமா பசோகோவின் மகனாவார். அவரது நிர்வாகம், உலகின் ஆக ஊழல்மிகுந்ததென்று மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

