'போர் மூண்டால் எண்ணெய் விலை விண்ணைத் தொடும்'

'போர் மூண்டால் எண்ணெய் விலை விண்ணைத் தொடும்'

2 mins read

ஈரானைத் தடுக்க உலகம் செயல்படாவிட்டால், எண்ணெய் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் உயரக்கூடும் என்று சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 14ஆம் தேதியன்று சவூதியில் உள்ள உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என சவூதி குற்றம் சுமத்தியது.

ஆனால் ஈரானுக்கு எதிராகப் போர் தொடுப்பதைவிட அரசியல் ரீதியாக தீர்வு காண தாம் விரும்பு வதாக சிபிஎஸ் ஒளிவழியின் '60 மினிட்ஸ்' நிகழ்ச்சியில் நேற்று இளவரசர் பேசியபோது கூறினார்.

மேலும், சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் உலகப் பொருளாதாரத்தை அழித்துவிடும் என்று அவர் கூறினார்.

"ஈரானைத் தடுக்க உலகம் ஒரு வலுவான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்காவிடில் எண்ணெய் விநியோகம் சீர்குலைந்து, அதன் விலை நம் வாழ்நாளில் நாம் காணாத அளவுக்கு அதிகம் உயரும்.

"தாக்குதல் நடத்தி உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிலையங்களைச் சேதப்படுத்தியதன் மூலம் உலகிற்குத் தேவையான 5 விழுக்காட்டுக்கும் அதிகமான எண்ணெய்யை ஈரான் விரயம் செய்துள்ளது. இது எங்களுக்கு எதிராகப் போர் முரசு கொட்டுவதாக நாங்கள் கருதுகிறோம்," என்றார் இளவரசர் சல்மான்.

செப்டம்பர் 14 ஆம் தேதியன்று அராம்கோ எண்ணெய் நிலையங்கள் மீது 18 ஆளில்லா வானூர்திகள், ஏழு ஏவுகணைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக சவூதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனை ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாகவும் சவூதி குற்றம் சுமத்தியது.

நிகழ்ச்சியின்போது சவூதியைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகியின் கொலை பற்றி இளவரசரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த இளவரசர், கஷோகியைக் கொல்ல தாம் உத்தரவிடவில்லை என்று தெளிவுபடுத்தினார். இருப்பினும், சவூதியின் தலைவர் என்ற முறையில் அந்தக் கொலைக்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இளவசருக்குத் தெரியாமல் சில அதிகாரிகள் கஷோகியைக் கொன்றதாக சவூதி தெரிவித்துள்ளது.

சவூதி அரசக் குடும்பத்துக்காக ஏறத்தாழ மூன்று மில்லியன் பேர் பணிபுரிவதாகவும் அவர்கள் அன்றாடம் செய்யும் பணிகளைப் பற்றி தெரிந்துகொள்வது சாத்தியமில்லை என்றும் இளவரசர் சல்மான் கூறினார்.

இருப்பினும், கஷோகியின் கொலை தொடர்பாக சவூதி தீவிர விசாரணை நடத்துவதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.