கோலாலம்பூர்: மின்-சிகரெட், 'வேப்பரைஸர்' கருவி ஆகியவற்றின் விற்பனைக்கும் பயன்பாட்டுக்கும் கடுமையான விதிமுறைகளை அமலாக்க மலேசியா திட்டமிடுவதாகச் சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
மரணம் விளைவிப்பதோடும், இளையரை அடிமைப்படுத்துவதோடும் தொடர்புபடுத்தப்படும் இந்தக் கருவிகளைத் தடை செய்ய உலகெங்கிலும் பல்வேறு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகையில், மலேசியா இவ்வாறு அறிவித்துள்ளது.
இந்தியா சென்ற மாதம் மின்-சிகரெட் விற்பனைக்குத் தடை விதித்தது. இளையரிடையில் இப்பழக்கம் "பெருமளவு பரவி வருவதாக" அது எச்சரித்தது.
அமெரிக்காவில் மின்-சிகரெட் பயன்பாட்டுடன் 12 மரணங்களும் 805 நோய்ச் சம்பவங்களும் தொடர்புபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மின்-சிகரெட்டைப் பயன்படுத்தவேண்டாமென பொதுச் சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.
யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2018ல் உலகச் சந்தையில் 15.7 பில்லியன் டாலர் (21.74 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்புள்ள மின்-சிகரெட் விற்பனையானது.
எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்குள், இது 40 பில்லியன் டாலருக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியா, மின்-சிகரெட்டையும் வேப்பரைஸரையும் புகையிலைப் பொருட்களுடன் ஒரே சட்டத்தின்கீழ் கொண்டுவர விரும்புகிறது. இதன்வழி, அவற்றின் விளம்பரங்கள் தடை செய்யப்படுவதோடு, பொது இடங்களில் அவற்றைப் புகைப்பதும் வயது வராதவர்கள் அவற்றைப் பயன்படுத்துவதும் தடுக்கப்படும் என மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மலேசியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஐந்து மில்லியன் மக்கள் புகைப்பதாக 2015ஆம் ஆண்டு சுகாதார அமைச்சு நடத்திய ஆய்வு காட்டியது.
மின்-சிகரெட்டின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டம் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் மின்னஞ்சல் தெரிவித்தது.

