இருபது கங்காருகளைத் தனது லாரியால் மோதியதன் தொடர்பில் ஆஸ்திரேலிய இளையர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை, துவாரா கடற்கரைக்கு அருகே சுமார் ஒரு மணி நேரமாக அவர், கண்ணில் தென்பட்ட அந்த விலங்குகளை மோதிக் கொன்றதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன. மாண்ட கங்காருகளில் மூன்று குட்டிகள். கைது செய்யப்பட்ட அந்த 19 வயது ஆடவர் மீது விலங்கு வதைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். இரக்கமற்ற அந்த ஆடவரின் செயலால் குறைந்தது மூன்று கங்காருகள் நிராதரவானதாக வயர்ஸ் விலங்கு மீட்புக் குழு தெரிவித்தது.
கங்காருகள் வாகனங்களால் தவறுதலாக மோதப்படுவது வழக்கத்திற்கு மாறானது அல்ல என்றாலும், ஒருவர் வேண்டுமென்றே இத்தனை கங்காருகளை மோதிக்கொன்றது உள்ளூர்வாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"கங்காருகள் ரத்த வெள்ளத்தில் செத்துக்கிடந்த காட்சி மிகவும் கோரமாக இருந்தது," என்று உள்ளூர்வாசி ரோப் எவனஸ் ஏபிசி தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். "போலிசார் தங்களது சேவைக்காலத்தில் பல்வேறு கொடூரங்களைப் பார்த்திருப்பர். ஆனால் இந்தக் காட்சியைக் கண்டு அவர்களும் அதிர்ச்சியடைந்ததைக் கண்கூடாகக் காண முடிகிறது,"என்று திரு எவன்ஸ் கூறினார்.

