சிலாங்கூரின் சுபாங் ஜயா மாவட்டத்தில் உயிரிழந்த தீயணைப்பாளர் முகம்மது அடிப் முகம்மது காசிம்மின் மரணத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் தொடர்புடைய எந்தத் தெளிவான ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.
சுபாங் ஜயா மாவட்டத்திலுள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதியன்று ஏற்பட்ட கலவரத்தில் 24 வயது திரு அடிப் கடுமையாகக் காயமடைந்தார். 21 நாட்களாக உயிருக்குப் போராடிய பிறகு அவர் கோலாலம்பூரிலுள்ள தேசிய இதய நிலையத்தில் மாண்டார்.
கொலை என போலிசாரால் வகைப்படுத்தப்பட்ட இந்த மரணத்தின் தொடர்பிலான விசாரணையின்போது 12 சந்தேக நபர்கள் பிடிபட்டதாக புக்கிட் அமான் சிஐடி டி5 தலைமை உதவி இயக்குநரான மூத்த துணை ஆணையாளர் தெரிவித்தார். அந்த 12 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், "நான்கு முக்கிய சந்தேக நபர்களின் இருப்பிடம் குறித்து பலர் கேட்டிருந்ததை நாங்கள் அறிந்துள்ளோம்," என்றும் கூறினார்.
அந்த நான்கு சந்தேக நபர்கள் எங்கே என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அந்நாட்டு உள்துறை அமைச்சிடம் கேட்டதாக 'த ஸ்டார்' பத்திரிகை தெரிவித்தது.

