சோல்: வடகொரியா, நீர்மூழ்கிக் கப்பல் வாயிலாக கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நேற்று பாய்ச்சியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் நிலுவையில் நின்ற அமெரிக்காவுடனான அணுவாயுதக் களைவு பற்றிய பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடரப்போவதாக வடகொரியா கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பை விடுத்த சில மணி நேரத்தில் வடகொரியா புதிதாக இந்த ஏவுகணைச் சோதனையை நடத்தியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அந்த ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து 450 கிலோ மீட்டர் தூரத்திற்கும் 910 கிலோ மீட்டர் உயரத்திற்கும் வானத்தில் பாய்ந்த பிறகு கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த ஏவுகணை பல்வேறு பாகங்களாக உடைந்திருக்கக்கூடும் என்று ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் யொஷிஹிடே தெரிவித்தார்.
"இதுபோன்ற ஏவுகணை சோதனைகள் ஐக்கிய நாட்டுத் தீர்மானங்களுக்கு எதிரானவை. இந்தச் செயலை ஜப்பான் வன்மையாகக் கண்டிக்கிறது," என்று செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்தார். வடகொரியாவின் கிழக்குக் கரைக்கு அருகே ஏவுகணை பாய்ச்சப்பட்டதுபோல் தோன்றுவதாகத் தென்கொரிய ராணுவம் கூறியது. ஆயினும் அந்த ஏவுகணை கடலிலிருந்து பாய்ச்சப்பட்டதா அல்லது நிலத்திலிருந்து பாய்ச்சப்பட்டதா என்பதை தென்கொரிய தற்காப்பு அமைச்சு உறுதிப்படுத்தவில்லை.
குறுகிய தூரத்திற்குப் பாயும் ஏவுகணைகளை மே மாதம் முதல் சோதித்து வந்தது வடகொரியா. அவற்றுக்கு மாறாக நீண்ட தூரம் செல்லும் இந்தப் புதிய ஏவுகணையைச் சோதனை செய்தது அதன் சமாதான வார்த்தைகளுக்கு முரணாக இருப்பதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மே மாதம் முதல் பியோங்யாங் குறைந்தது 10 வெவ்வேறு ராணுவச் சோதனைகளில் 15 ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது.
2017ஆம் ஆண்டு முதற்கொண்டு, வடகொரியா சோதனை செய்துள்ள ஆக அதிக தூரம் செல்லக்கூடிய ஏவுகணையாக இது உள்ளது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் தனது பேரம் பேசும் திறனை அதிகரிப்பதற்காக இந்நடவடிக்கையை வடகொரியா எடுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
புக்குக்சோங்-3 என்ற புதியவகை ஏவுகணையை வடகொரியா பாய்ச்சியிருக்கலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கட்டமைப்பு தெரிவித்தது.
முன்னதாக, குறுகிய தூரம் செல்லக்கூடிய கணைகளை வடகொரியா பலமுறை சோதனை செய்ததை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மட்டுப்படுத்தினார்.

