மிக மிக அரிதான குரங்கு வகைகளில் ஒன்றான ஃபிரான்சுவா லங்கூர் இன குரங்குக்குட்டி ஒன்று, அழகான ஆரஞ்சு நிற உரோமத்துடன் ஆஸ்திரேலியாவில் பிறந்துள்ளது. ஆண் குரங்குக்குட்டியான அது, சிட்னியின் டரோங்கா விலங்கியல் தோட்டத்தில் கடந்த வாரம் பிறந்ததாகக் கூறப்பட்டது.
அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த வகைக் குரங்குகள் சீனாவிலும் வியட்நாமிலும் மட்டுமே பொதுவாகக் காணப்படும். நகரமயமாதலை முன்னிட்டு, அந்த நாடுகளிலும் இந்த வகைக் குரங்குகள் கொல்லப்பட்டு வருகின்றன.
"காடுகளுக்குள் ஃபிரான்சுவா லங்கூர் இன குரங்குகளைக் காண்பது அரிது; அவ்வினத்தில் குரங்குக்குட்டியைக் காண்பது அரிதிலும் அரிது," என்று அந்த விலங்கியல் தோட்டத்தின் மூத்த அதிகாரி ஜேன் மார்ஷல் கூறியுள்ளார்.
இந்த குரங்குக்குட்டியின் உரோமம் சில வாரங்களுக்கு மட்டுமே ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். நாட்பட, அதன் தாயார் நோயலின் உரோமத்தைப்போல இதன் உரோமமும் கறுப்பு நிறமாக மாறி விடும். இந்த வகைக் குரங்குகள் சுமார் 3,000 மட்டுமே தற்போது எஞ்சி இருக்கக்கூடும் என அந்த விலங்கியல் தோட்டம் குறிப்பிட்டது.
இந்த வகைக் குரங்குகள் அதீத சுறுசுறுப்புடனும் வெகுவான அறிவுத்திறத்துடனும் இருக்கும் என்று திருவாட்டி மார்ஷல் குறிப்பிட்டார்.

