தென் பிலிப்பீன்ஸ்; முன்னாள் கிளர்ச்சியாளர்கள் கொலை

தென் பிலிப்பீன்ஸ்; முன்னாள் கிளர்ச்சியாளர்கள் கொலை

1 mins read
fbda5f04-553d-44a4-a409-d2b339d43caa
-

தென் பிலிப்பீன்சில் ஏழு முன்னாள் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் அந்நாட்டின் ஆகப் பெரிய பயங்கரவாத இயக்கமாக முன்பு திகழ்ந்த மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் உறுப்பினர்களாக இருந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது.

2014ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த இயக்கம் கடந்த மாதம் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ரத்து செய்யத் தொடங்கியது. இது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐ.எஸ் அனைத்துலக பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் 'டாவ்லா இஸ்லாமியா' அமைப்பு, மோரோ முன்னணியின் முகாம் ஒன்றைக் கடந்த வெள்ளிக்கிழமை பல மணி நேரம் தாக்கியது. இந்தச் சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றதாக பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் 'ஸைட்' புலனாய்வுக்குழு தெரிவித்தது.

பிலிப்பீன்சின் மிண்டானோ பகுதியில் குறைந்தது 150,000 பேரைப் பலிவாங்கிய பூசலுக்கு மோரோ முன்னணியும் பிலிப்பீன்ஸ் அரசாங்கமும் கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தம் முற்றுப்புள்ளி வைத்தது. அந்த ஒப்பந்தத்தின்படி முஸ்லிம்கள் வாழும் தன்னாட்சி வட்டாரத்தின் நிர்வாகம் மோரோ முன்னணிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அதே பகுதியில் ஐ.எஸ் அமைப்பினர் தென்கிழக்காசியாவில் தனக்கென அரணை உருவாக்க முயல்வதாக பிலிப்பீன்சின் அதிபர் ரோட்ரிகோ டுட்டார்டே தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு மே மாதத்தில் துப்பாக்கிகள் தாங்கிய நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் மிண்டானோவிலுள்ள மராவி நகரை ஆக்கிரமித்தனர். அந்தக் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவப்படையினருக்கும் இடையே நீடித்த ஐந்து மாத மோதலில் 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.