பாக்தாத்: ஈராக்கில் கடந்த நான்கு நாட்களாக அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் குறைந்தது 73 பேர் மரணமடைந்திருப்பதாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். மாண்டவர்களில் ஈராக்கியப் பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர். மரண எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஈராக்கிய இளையர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாது அரசுத் துறையில் ஊழல் தலைவிரித்தாடுவதாக அந்நாட்டு இளையர்கள் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர். இவற்றைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று போராட்டம் வெடித்தது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கிக்காரர்கள் இரண்டு போலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு பேரைச் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டின் ராணுவம் தெரிவித்தது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கை அரசாங்கத்தின் செவிகளை அடைந்துவிட்டதாகவும் பொறுமையுடன் இருக்கும்படியும் ஈராக்கியப் பிரதமர் அடேல் அப்டேல் மாஹ்டி கேட்டுக்கொண்டார். ஆனால் நூற்றுக்கணக்கான ஈராக்கியர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனால் காலவரையற்ற ஊரடங்கு விதிக்கப்பட்டது. இணையச் சேவையும் முடக்கப்பட்டது. இருப்பினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வாங்காமல் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க ஈராக்கியப் பாதுகாப்புப் படை கடுமையான நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்த ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, பிரதமர் மாஹ்டி பதவி விலக வேண்டும் என்றும் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் ஈராக்கில் செல்வாக்குமிக்க ஷியா பிரிவு மத
குருவான மொக்தடார் சடார் அழைப்பு விடுத்துள்ளார். பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் திட்டத்தை அரசாங்கம் அமலாக்கும் வரை நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டாம் என்று தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திரு சடார் உத்தரவிட்டுள்ளார்.

