ஸ்டாக்ஹோம்: வடகொரியா அண்மையில் ஏவுகணை சோதனை நடத்தியது. நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து அந்த ஏவுகணை பாய்ச்சப்பட்டதாக நம்பப்படுகிறது.
இதையடுத்து, வடகொரிய அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளும் அணுவாயுதப் பேச்சுவார்த்தைக்காக நேற்று சுவீடன் தலை
நகர் ஸ்டாக்ஹோமில் சந்தித்தனர்.
வடகொரியாவின் கிம் மியோங் கில்லும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதரான ஸ்டீவன் பீகனும் பேச்சுவார்த்தை நடத்தும் குழுக்களில் இடம்பெற்றனர்.
பேச்சுவார்த்தை ஸ்டாக்ஹோம் அருகில் உள்ள தீவு ஒன்றில் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட இடத்துக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.
"பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க, வடகொரிய அதிகாரிகள் சுவீடன் வந்திருப்பது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அணுவாயுதம் இல்லாத நிலையை எட்டவும் அமைதியான முறையில் தீர்வு காணவும் பேச்சுவார்த்தை அவசியம்," என்று சுவீடனின் வெளியுறவு அமைச்சர் ஆன் லிட் டுவிட்டரில் பதிவு செய்தார்.
வடகொரியா அதன் அணுவாயுதங்களைச் செயலிழக்க வைப்பது குறித்து கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இவ்வாண்டு ஜனவரி மாதத்திலும் ஸ்டாக்ஹோமில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே ஏவுகணைச் சோதனைகளை நடத்தி அமெரிக்காவுக்கு நெருக்குதலைத் தரும் அணுகுமுறையை வடகொரியா அடிக்கடி கையாண்டு வருகிறது.
பேச்சுவார்த்தை நல்ல தீர்வுக்கான பாதையை அமைத்துத் தரும் என தாம் நம்புவதாக வடகொரிய அதிகாரி கிம் மியோங் கில் கூறினார்.

