பேங்காக்: தாய்லாந்தில் உள்ள நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு எதிர்நோக்கிய பலரை விடுவித்த பிறகு நீதிபதி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.
சம்பவம் நிகழ்ந்தபோது நீதிமன்றத்தில் பலர் கூடியிருந்தனர். தன்னைத் தானே சுட்டுக்கொள்வதற்கு முன்பு நீதிபதி கனகோர்ன் பியான்சானா தாய்லாந்தின் நீதித்துறையைக் கடுமையாக விமர்சித்தார். கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய ஐந்து முஸ்லிம் சந்தேக நபர்களை விடுவித்த நீதிபதி, நாட்டின் சட்டம் இன்னும் தெளிவாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
"ஒருவருக்குத் தண்டனை விதிக்க தெளிவான நம்பகமான ஆதாரங்கள் அவசியம். அவர்கள் குற்றம் புரிந்தார்களா இல்லையா என்ற சந்தேகம் எழுந்தால் தண்டனை விதிக்கக்கூடாது," என்று பலர் முன்னிலையில் நீதிபதி கூறினார். இவற்றை அவர் தமது கைபேசி வாயிலாக ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தார்.
"இந்த ஐவரும் குற்றம் புரியவில்லை என்று நான் சொல்லவில்லை. அவர்கள் குற்றம் புரிந்திருக்கலாம். ஆனால் நீதித்துறை வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும். தவறான நபர்களைத் தண்டிப்பது, பாவம் ஓர் இடத்தில் இருக்க பழியை வேறொருவர் சுமப்பதற்குச் சமமாகும்," என்று திரு கனகோர்ன் கூறினார்.
அதையடுத்து, தமது நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. திரு கனகோர்ன் உயிர் பிழைத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மனவுளைச்சல் காரணமாக அவர் அப்படி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

