நிலைகுத்தியது ஹாங்காங்

நிலைகுத்தியது ஹாங்காங்

2 mins read
3ca180a4-b632-401d-a328-6f1d9936351a
ஹாங்காங்கில் மத்திய நகர்ப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹாங்காங் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்காங்கில் நேற்றும் கொதிப்பு அடங்கவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் முகக்கவசம் அணிவதை அரசாங்கம் தடை செய்ததை மீறி நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் முகக்கவசத்துடன் ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

காஸ்வே பே வர்த்தக வட்டாரத்தில் இருந்து மத்திய நகரத்தை நோக்கி நேற்று பேரணியாகச் சென்றனர். இதனால் நேற்றும் நகரத்தின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ரயில் சேவைகள் முடங்கின.

ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் நேற்று முன்தினம் அவசரநிலையை அறிவித்தார். முகக்கவசம் அணிந்து போராடுவதைத் தடை செய்வதற்கான உத்தரவும் அப்போது பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறுவோருக்கு அதிகபட்சமாக 25,000 ஹாங்காங் டாலர் (S$4.400) வரை அபராதம் விதிக்கவும் ஓராண்டு வரையில் சிறையில் அடைக்கவும் புதிய சட்டம் வழிசெய்கிறது.

முகக்கவசம் அணிந்து போராடிய நாள் முதல் ஓராண்டு வரையில் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படலாம் என்றும் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

சட்டம் அறிவிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை இரவே அதற்கு எதிராகப் பல்லாயிரம் பேர் ஹாங்காங் நகர வீதிகளில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடையை தாங்கள் அப்பட்டமாக மீறியதை அரசாங்கத்துக்கு உணர்த்தும் வகையில் ஏராளமானோர் முகக் கவசத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். போலிஸ் அதிகாரத்தை மீட்டுக்கொள்ளுமாறும் சுதந்திரம் வேண்டும் என்றும் அவர்கள் குரல் எழுப்பினர்.

முழு விசாரணை வேண்டும்: ஐநா

ஹாங்காங் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் வன்முறை நிகழ்ந்தது குறித்து சுயேச்சையான முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்களின்போது ஏற்பட்ட காயங்கள் அபாயத்தின் அறிகுறிகளாக இருக்கிறது என்று ஐநா தூதர் மிசேல் பாச்லெட் நேற்று கோலாலம்பூரில் தெரிவித்தார். அண்மையில் இரு பதின்ம வயதினர் சுடப்பட்டதோடு ஒரு பத்திரிகையாளருக்கு நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

"சில போராட்டங்களின் போது அளவுக்கு மிஞ்சிய வன்முறை ஏற்பட்டதும் போலிஸ், போராட்டக்காரர் கள், செய்தியாளர்கள் ஆகியோருக்கு கொடுங் காயங்கள் ஏற்பட்டுள்ளதும் எங்களைக் கவலையுறச் செய்துள்ளன," என்றார் அவர்.