பிலிப்பீன்ஸில் பிரிட்டி‌ஷ் வர்த்தகரையும் அவரது பிலிப்பினோ மனைவியையும் கடத்திய தீவிரவாதிகள்

பிலிப்பீன்ஸில் பிரிட்டி‌ஷ் வர்த்தகரையும் அவரது பிலிப்பினோ மனைவியையும் கடத்திய தீவிரவாதிகள்

1 mins read
c543cde3-3f91-4590-8309-16be0f798760
பிரிட்டனைச் சேர்ந்த திரு ஏலன் ஆர்த்தூர் ஹிரோன்ஸும் அவரது மனைவி திருமதி வெல்மா பக்லினாவன் ஹிரோன்ஸும். படங்கள்: பிலிப்பீன்ஸ் போலிஸ் -

மணிலா: பிரிட்டி‌ஷ் வர்த்தகர் ஒருவரும் அவரது பிலிப்பீன்ஸ் நாட்டு மனைவியும் பிலிப்பீன்ஸின் தென்பகுதியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக பிலிப்பீன்ஸின் தென்பகுதியில் பதுங்கியுள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளையும் தொண்டூழிய அமைப்பைச் சேர்ந்தோரையும் பிடித்து வைத்துக்கொண்டு பணம் கரக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக ராணுவம் மற்றும் போலிஸ் தரப்பில் நேற்று கூறப்பட்டது.

பிரிட்டனைச் சேர்ந்த திரு ஏலன் ஆர்த்தூர் ஹிரோன்ஸ், 70 வயது, அவருடைய பிலிப்பீன்ஸ் நாட்டு மனைவி திருமதி வெல்மா பக்லினாவன் ஹிரோன்ஸ் ஆகியோரை கடந்த வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஆறு துப்பாக்கிக்காரர்கள் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சம்போங்கா மாகாணத்தைச் சேர்ந்த துகுரான் நகரில் உள்ள கடற்கரைத் தளத்தில் விடுமுறையை உல்லாசமாகக் களிக்கச் சென்ற இந்தத் தம்பதியினர் கடத்தப்பட்டுள்ளனர்.

அந்தத் தம்பதியினர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு இயந்திரப் படகு ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதாக அந்த வட்டார போலிஸ் தலைவர் மேஜர் கல்வெஸ் கூறினார்.

கடத்தலில் ஈடுபட்ட கும்பல் அபு சயேப் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

பிலிப்பீன்ஸில் நடக்கும் கடத்திச்சென்று தலையை வெட்டுதல் போன்ற கொடூரச் சம்பவங்களில் அபு சயேப் இயக்கத்தினர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.