லாபாஸ்: உலகின் மிக நீளமான மலைத் தொடர்களைக் கொண்டுள்ள ஆந்திஸ் மலைத் தொடரில் 11,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை 'மரண சாலை' என்று அழைக்கப்படுகிறது. 'டெத் ரோடு' என்னும் அந்தச் சாலையில் சைக்கிளில் பயணம் செய்வதற்கு மனத்தில் மட்டும் அல்ல உடலிலும் வலு இருக்க வேண்டும். ஏராளமானோரின் உயிரை விழுங்கிய இந்தச் சாலை பொலிவியாவில் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் நடந்த 60 கிலோ மீட்டர் சைக்கிள் பந்தயத்தில் அந்நாட்டைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி முனோஸ் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.
"செங்குத்தான அந்த மரண சாலையில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்காமல் சைக்கிள் ஓட்ட வேண்டும். மிதி வண்டியின் பெடலை அழுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அழுத்துவதை நிறுத்தினால் சைக்கிள் கீழ்நோக்கிச் சென்று அதளபாதாளத்தில் விழக்கூடும்," என்று அந்த மூதாட்டி முனோஸ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
திருமதி முனோஸின் அன்புக்குரிய மகன் அண்மையில் திடீரென காலமானார். அந்த இழப்பினால் ஏற்பட்ட மன வலியைப் போக்குவதற்காக திருமதி முனோஸ் இதுபோன்ற சாகசப் போட்டிகளில் பங்கெடுப்பதாகக் கூறியுள்ளார்.
இவருக்கு ஆறு பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளாராம் முனோஸ்.

