ஹாங்காங்கில் நேற்று நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்ததுடன், பலரை போலிசார் கைது செய்தனர்.
சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், பெட்ரோல் குண்டு போன்றவற்றை போலிசாரை நோக்கி வீசினர். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
முகக்கவசம் அணிவதற்கு எதிரான சட்டம் நடப்புக்கு வந்ததை எதிர்த்து நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
நேற்று பிற்பகல் வேளையில் ஹாங்காங்கில் பெய்த கனத்த மழையையும் சட்டைசெய்யாமல் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் முகக்கவசங்கள் அணிந்தபடி, ஹாங்காங் மக்களை போராட்டத்தில் குதிக்க அழைப்பு விடுக்கும் முழக்கத்துடன் நடந்து சென்றனர்.
அங்குள்ள போலிஸ் தலைமையகத்தின் கூரை, பின்புற நுழைவாயில் போன்ற பகுதிகளிலிருந்து போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். போலிஸ் தலைமையகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், போத்தல்கள் போன்றவற்றை வீசினர்.
கறுப்பு உடையணிந்த ஆர்ப்பாட்டக்காரகள் பலரை போலிசார் வளைத்துப் பிடித்ததை தொலைக்காட்சி காணொளிகள் காட்டின.
நகரின் முக்கிய பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டவிரோதமாகக் கூடுவதாகவும் சாலைகளை மறிப்பதாகவும் போலிஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக போலிஸ் விரைவில் நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் குறிப்பிட்ட அந்த அறிக்கை, சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் உடனடியாக அவ்விடத்திலிருந்து அகலுமாறு குறிப்பிட்டது.
சில இடங்களில் வன்முறையும் வெடித்தது. ஷாம் ஷுய் போ எனும் இடத்தில் டாக்சி ஓட்டுநர் ஒருவரை அவரது வாகனத்திலிருந்து வெளியே இழுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதாகக் கூறப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில் பெட்ரோல் குண்டு ஒன்று வெடித்ததில் செய்தியாளர் ஒருவரின் தலையில் தீப்பற்றியதாகவும் அது சில வினாடிகளுக்குள் அணைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஹாங்காங்கில் இருக்கும் சீனப் பிரதிநிதியின் அலுவலகம் இந்த ஆர்ப்பாட்டங்களுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், சட்டவிரோத வன்முறைகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்குவதை ஆதரிப்பதாகவும் அது குறிப்பிட்டது. இதன் தொடர்பில் சீனா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று கவனிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

