சர்ச்சைக்குரிய 1எம்டிபி நிறுவனத்திடமிருந்து பெற்ற பணத்தைத் திருப்பி ஒப்படைக்குமாறு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் சகோதரரிடமும் முன்னாள் அமைச்சர்களிடமும் மலேசிய அரசாங்கம் கோரியுள்ளது.
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம், நாஸிர் ரசாக் உட்பட 80 தனிநபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் மொத்தம் 420 மில்லியன் ரிங்கிட் (138 மில்லியன் வெள்ளி) பணத்தைப் பெற முயல்கிறது. இவ்வாறு கேட்கப்படும் தனிநபர்களில் முன்னாள் துணை நிதியமைச்சர் அகமது மஸ்லானும் முன்னாள் வர்த்தக அமைச்சர் ஷாஹ்ரிர் சமாட்டும் அடங்குவர்.
1எம்டிபியிலிருந்து பெறப்பட்ட மோசடி பணத்தைத் தாங்களாகவே முன்வந்து அரசிடம் ஒப்படைப்போருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படமாட்டாது என்று அந்த ஆணையம் உறுதி அளித்துள்ளது.

