நச்சுமிக்க இந்தக் கோளமீன் (pufferfish), இறுதியில் முன்னாள் மீனவரின் வாழ்வாதாரத்திற்கு மருந்தாக அமைந்தது. 57 வயது காசிம் ஹசான், காய்ந்த கோளமீனால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களை விற்று நாள்தோறும் 100 ரிங்கிட் சம்பாதிக்கிறார்.
மேசை விளக்கு, மணி உள்ளிட்ட பல்வேறு அலங்காரப் பொருட்களை அவர் வாடிக்கையாளர்களின் முன்பதிவுகளுக்கு ஏற்றாற்போல செய்து விற்கிறார். முன்பு மீனவராகப் பணியாற்றிய திரு காசிம், மெர்சிங் கடற்பகுதியில் மீன்களின் எண்ணிக்கை குறைந்ததால் அந்தத் தொழிலைக் கைவிட்டதாக 'த ஸ்டார்' இணையத்தளத்திடம் தெரிவித்தார்.
மரப்பட்டை, தேங்காய் ஓடுகள், கிளிஞ்சல்கள் ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு கலைப்பொருட்களைச் செய்வதைவிட கோளமீனைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்று திரு காசிம் கூறினார். அந்த மீனின் எலும்புகளையும் உடல் உறுப்புகளையும் கவனமாக அகற்றி, தோலையும் முள்ளையும் மட்டும் விட்டுவைக்கவேண்டும் என்றார் திரு காசிம். ஆரம்பத்தில் அந்த முட்களால் கீறப்பட்டு தனது கை மரத்துப்போனதாகத் திரு காசிம் கூறினார். ஆயினும், போகப் போக இந்தத் தொழில் தமக்குப் பழகிவிட்டதாகக் கூறினார்.

