ஹாங்காங்: ஹாங்காங்கின் பல பகுதிகளில் உள்ள கடைத்தொகுதிகளில் நேற்று சுதந்திரம் கோரி நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுதிரண்டனர்.
"ஹாங்காங்கின் சுதந்திரத்திற்காக போராடுவோம்", "முகக்கவசம் அணிய எங்களுக்கு உரிமை உண்டு" உள்ளிட்ட வாசகங்களை முழங்கியவாறு கடைத்தொகுதிகளுக்குள் வட்ட வடிவமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் நின்றனர்.
ஹாங்காங்கில் அரை நூற்றாண்டில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தின்கீழ், பேரணியின்போது முகக்கவசம் அணிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடந்த சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டதையடுத்து மூன்று நாட்களாக போராட்டங்கள் வன்முறையாக வெடித்தன.
முகக்கவசத் தடை விதிக்கப்பட்டதையடுத்து சட்டத்துக்கு உட்பட்டு நடக்காத ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. இத்தடையை மீறுவோருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
சந்தேக நபர்களில் 18 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் 38 வயது வேலையில்லாத மாது ஒருவரும் அடங்குவர். சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாகவும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹாங்காங்கில் நேற்று பொது விடுமுறை என்பதால், பள்ளிகள், வேலையிடங்கள் மற்றும் சிறு கடைகள் மூடப்பட்டிருந்தன. நகரின் மெட்ரோ ரயில் கட்டமைப்பின் ஒரு பகுதி திறக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கடைத்தொகுதிகள் குறுகிய நேரம் மட்டுமே செயல்பட்டன.

