'மகாதீருக்கு எதிராக அன்வார் நின்றால் அரசியல் ரீதியாக அவர் அகற்றப்படுவார்'

'மகாதீருக்கு எதிராக அன்வார் நின்றால் அரசியல் ரீதியாக அவர் அகற்றப்படுவார்'

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், பிரதமர் மகாதீர் முகம்மதுக்கு எதிராக நின்றால், அரசியலிருந்து விலகுவதற்கு கட்டாயப்படுத்தப்படுவார் என்று பிகேஆர் கட்சியின் இணை நிறுவனர் சையது ஹுசேன் அலி தெரிவித்துள்ளார்.

"அவருக்கு இது கடினம் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், அவர் அவ்வாறு செய்தால் டாக்டர் மகாதீர் அவரை அரசியல் ரீதியாக நீக்கிவிடுவார்," என்று கடந்த வியாழக்கிழமை மலேசியாகினி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் திரு ஹுசேன் அலி இவ்வாறு கருத்துரைத்தார்.

மலேசிய பொருளிய விவகார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பாக அன்வார் குற்றஞ்சாட்டப்படுவதற்கு வழிகள் தேடப்பட்டு வருவதை திரு ஹுசேன் அலி சுட்டிக்காட்டினார்.

"டாக்டர் மகாதீர் எதையும் செய்வார் என்பது எங்களுக்கு தெரியும். காணொளி வெளி வந்ததும், உடனடியாக அஸ்மினை வீழ்த்துவதற்கான அரசியல் நடவடிக்கை இது என்று அவர் கூறுவார்," என்று திரு ஹுசேன் அலி குறிப்பிட்டார்.

"அக்காணொளி தொடர்பில் யாரோ ஒருவர் இருப்பதாக காவல்துறையினர் உறுதியாக கூறுகின்றனர். மேலும், அதற்காக நூறாயிரக்கணக்கான ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறினர்.

"அன்வாரின் முன்னாள் அரசியல் செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், அன்வாரை இதில் சம்பந்தப்படுத்த அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பெற விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

"காணொளிக்குப் பின்னால் ஒரு நபராக அன்வார் செயல்பட்டார் என்று கைது செய்யப்பட்டு அவர் தண்டிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மகாதீருக்கு பதிலாக அன்வார் பிரதமராக நியமிக்கப்படுவது மிகவும் கடினம். ஆனால் அன்வார் சுத்தமானவர். அரசியல் சிக்கலானது மற்றும் அழுக்கானது," என்று திரு ஹுசேன் அலி கூறினார்.