கோலாலம்பூர்: உலகளாவிய பொருளியல் மந்தநிலை அச்சங்கள், நீடித்த அமெரிக்க-சீனா வர்த்தகப் போர், முன்னைய அரசாங்கம் விட்டுச்சென்றுள்ள பெரிய கடன்சுமை ஆகியவற்றுடன் போராடும் மலேசிய அரசாங்கம், வலுவிழந்த பொருளியல் பார்வையை மாற்றும் நோக்கில் விரிவான வரவுசெலவுத் திட்டத்தை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளியலான மலேசியா, உலகளாவிய பொருளியல் சரிவு தணிப்பு போக்கினால் இந்த ஆண்டின் முதல் பாதியில் எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ச்சி கண்டது.
ஆனால், உலகெங்கிலும் வளர்ந்து வரும் தன்னைப்பேணித்தன கொள்கைகள், வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் மலேசியாவையும் பாதிக்கும் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
அடுத்த ஆண்டு உள்நாட்டு தேவையை அதிகரிக்க, 1 டிரில்லியன் ரிங்கிட் (S$329 பில்லியன்) கடனைக் கையாள வேண்டிய நிலை இருந்தாலும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதின் அரசாங்கம் அதன் மேம்பாட்டு செலவினங்களைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டன.

