'சீனாவின் உதவி ஏற்கப்படலாம்'

'சீனாவின் உதவி ஏற்கப்படலாம்'

2 mins read
cc9fa6d7-044c-487d-b504-d156e9711968
ஆர்ப்பாட்டக்காரர்களைத் துரத்திப் பிடிக்க ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று போலிசார் நுழைந்ததால் நேற்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்காங்: ஹாங்காங்கில் தற்போது நடந்துவரும் வன்முறைச் சம்பவங்களை சமாளிக்க சீனாவின் உதவியை மறுப்பதற்கு இல்லை என்று ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் கூறியுள்ளார்.

இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையை ஹாங்காங் நிர்வாகத்தால் கையாள முடியும் என்றார் அவர்.

முகமூடி அணியத் தடை விதிக்கப்பட்டதால் கடந்த வெள்ளிக் கிழமை அன்று ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மெட்ரோ ரயில் நிலையங்கள், சீன வங்கிகள், சீனாவுடன் தொடர்புடைய வர்த்தக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறைகளில் இறங்கினர்.

நிர்வாக மன்றக் கூட்டத்துக்கு முன்பு பேசிய கேரி லாம், கடைத் தொகுதிகளையும் எம்ஆர்டி நிலையங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சீரழிப்பது ஹாங்காங்கை அழிப்பதற்கு ஈடாகும் என்று குறிப்பிட்டார்.

"அவை எல்லாமே ஹாங்காங்கை மிகவும் அபாயகரமான நிலைக்குத் தள்ளியுள்ள சட்ட விரோத நடவடிக்கைகளாகும். முகமூடிக்கு விதிக்கப்பட்ட தடை தோல்வியடையவில்லை," என்று அவர் கூறினார்.

சென்ற வெள்ளிக்கிழமை அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி முகமூடி அணிவதற்கு கேரி லாம் தடை உத்தரவைப் பிறப்பித்தார். இந்த நிலையில் திங்கட்கிழமை அன்று மோங் கோக், யுவென் லோங், சியுங் குவான் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. முகமூடி தடைக்குப் பிறகு நேற்று முதல் நாள் பள்ளிக்கு வந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பலர் முகமூடிக்குப் பதிலாக முகக்கவசங்களை அணிந்திருந்தனர். ஊடகங்களிடம் பேசிய மாணவர்கள், முகமூடிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக முகக்கவசங்களை அணிந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது சக மாணவர் ஒருவரை போலிசார் சுட்டுக் காயப்படுத்தியதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க விரும்புவதாக அவர்கள் கூறினர். நேற்று ஹாங்காங்கில் வர்த்தகம் ஓரளவு வழக்க நிலைக்குத் திரும்பியது.