வாஷிங்டன்: சிரியாவின் வட கிழக்கு எல்லையில் குர்திய படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமெரிக்கப் படைகள் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி முடிவால் குர்திய படையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் குர்திய படைகள் மீது துருக்கி தாக்குதலை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியாவில் உள்ள ஐஎஸ் படைகளைத் துடைத்தொழிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்காவுக்கு குர்திய படைகள் உறுதுணையாக இருந்து வந்துள்ளன.
சிரியா முழுவதும் சுமார் 1,000 அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் எல்லையோரமுள்ள இரண்டு டஜன் வீரர்களை மட்டுமே அமெரிக்கா மீட்டுக் கொண்டுள்ளது.
"முட்டாள்தனமான முடிவற்ற போரிலிருந்து விலகுகிறோம்," என்று முன்னதாக டுவிட்டர் பதிவில் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்தப் பிரச்சினையை துருக்கி, ஐரோப்பா, ஈரான், ஈராக், ரஷ்யா, குர்தியர்கள் ஆகியவை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆனால் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு உலகம் முழுவதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் அமெரிக்கப் படைகள் மீட்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தங்களது முதுகில் குத்திவிட்டார்கள் என குர்திய படையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவின் படை மீட்பு முடிவை தங்களுக்குச் சாதமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் துருக்கியை எச்சரித்துள்ளார்.
துருக்கி எல்லை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்நாட்டின் பொருளியலை துடைத்தொழிப்போம் என்றும் திரு டிரம்ப் கூறியுள்ளார். ஜப்பானுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசினார்.

