உலகப் பொருளியலுக்குப் பெரும் இழப்பு ஏற்படக்கூடும்

உலகப் பொருளியலுக்குப் பெரும் இழப்பு ஏற்படக்கூடும்

1 mins read
8ef649ad-2b70-474b-aae9-3275859dc465
நியூயார்க் நகரின் இரண்டாவது அவென்யூவில் போக்குவரத்து. (படம்: ஏஎஃப்பி) -

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தக மோதலால் உலகப் பொருளியலுக்கு கிட்டத்தட்ட 700 பில்லியன் அமெரிக்க டாலர் (S$967 பி.) இழப்பு நேரக்கூடும் என்று நேற்று அனைத்துலக பணநிதியம் எச்சரிக்கை விடுத்தது. உலகப் பொருளியல், 2020ஆம் ஆண்டுக்குள் இத்தகைய பாதிப்புக்குள்ளாகும் என்று நேற்று முன்தினம் அனைத்துலக பணநிதியத்தின் புதிய நிர்வாக இயக்குநரான திருவாட்டி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்தார். இந்த இழப்புத் தொகை சுவிட்சர்லாந்தின் முழு பொருளியலுக்கு ஒப்பானது என்றும் கூறப்பட்டது.

ஈராண்டுக்கு முன்னர் ஏறுமுகமாக இருந்த உலகப் பொருளியல் நிலை, இப்போது மெதுவடைந்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தொடங்கியுள்ள வர்த்தகப் போரும் ஒரு காரணம் என்று புதிதாகப் பதவி ஏற்று பேசிய தம் முதல் உரையில் தெரிவித்தார் திருவாட்டி ஜோர்ஜீவா.இரு வல்லரசுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக மோதலால் நேர்ந்துள்ள பொருளியல் இழப்புகளை அடிப்படையாகக் கொண்டு 2019, 2020ஆம் ஆண்டுகளுக்கான உலகப் பொருளியல் வளர்ச்சிக் கணிப்பு குறைக்கப்படும். இது குறித்து அடுத்த வாரம் நிதியம் ஆராயும் என்று திருவாட்டி ஜோர்ஜீவா கூறினார்.

"வர்த்தகப் பூசல்களால் நேரக்கூடிய ஆபத்துகள் பற்றி ஏற்கெனவே பேசியிருக்கிறோம். இப்போது விளைவுகளைக் கண்ணாரக் காண்கிறோம்," என்றார் அவர்.

வர்த்தகப் போரால் பெரும் பொருளியல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அமெரிக்காவும் சீனாவும் இவ்வாரம் வாஷிங்டனில் சந்திப்பு நிகழ்த்தவுள்ளன. சந்திப்பின்மூலம் இருதரப்பும் ஒரு புரிந்துணர்வை அடைவதுடன் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களும் அகலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.