லண்டன்: இன்னும் 10 நாட்களில் பிரெக்சிட் தொடர்பாகக் கூடவுள்ள சிறப்பு நாடாளுமன்ற அமர்வில் மோதல் இருப்பது உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநிலை மாநாடு வரும் 17ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் கழித்து நடக்கவுள்ள சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டின் எதிர்காலம் குறித்து பெரும் சர்ச்சைகள் எழக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே இம்மாத இறுதிக்குள் ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நடவடிக்கையைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் விரைந்து செயலாற்ற வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமது நாட்டுக்காகவும் வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்காகவும் பிரிட்டனுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு இறுதிவரை போராடவுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் கலந்துரையாடிய அயர்லாந்து தலைவர் கூறியுள்ளார்.
ஓர் ஒப்பந்தத்தை போரிஸ் உறுதிசெய்யத் தவறினால், கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க அவரைக் கட்டாயப்படுத்துவது குறித்துத் தீர்ப்பளிக்கக் காத்திருக்கும் என்று ஸ்காட்லாந்தின் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது.

