புத்ராஜெயா: மலேசியா, வாகன நுழைவு அனுமதி முறை (VEP) அமலாக்கத்தை மீண்டும் ஒத்தி வைத்துள்ளது.அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அது அமலுக்கு வரும் என்று அந் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நேற்று தெரிவித்தார்.ரேடியோ அலைவரிசை அடையாள சாதனங்களைப் பொருத்துவதில் சில சிக்கல்கள் நீடிக்கின்றன. இந்தச் சாதனத்தைப் பொருத்த வேண்டிய கார், வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதனைச் சமாளிக்கும் வழிகளை ஆராய்ந்து வருகிறோம்," என்று வாகனங்கள் நுழைவதற்குத் தேவையான 'RFID' எனும் ரேடியோ அலைவரிசை அடையாளப் பட்டையைக் குறிப்பிட்டு செய்தியாளர்களிடம் அமைச்சர் சொன்னார்.
எல்லா வாகனங்களிலும் அடை யாளத்தைப் பொருத்துவதற்கான தொழில்நுட்பத்தை இறுதி செய்து வருவதாகவும் விரைவில் அது பற்றி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். "ஆனால் இவ்வாண்டு வாகன அனுமதி முறை அமலுக்கு வராது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சாத்தியமாகலாம். எல்லாருக்கும் போதுமான கால அவகாசத்தை வழங்க விரும்புகிறோம்," என்றும் அவர் சொன்னார்.
"வாகன நுழைவு அனுமதி நடைமுறைக்கு வந்ததும் 'விஇபி' இல்லாத வெளிநாட்டு வாகனங் களும் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்று கூறிய அமைச்சர் லோக், வெளியேறும் போது அவர்கள் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்றார்.
"ஜோகூர் பாரு சோதனைச் சாவடியில் முதலில் 'விஇபி' அறிமுகப்படுத்தப்படும். பின்னர் துவாஸ் சோதனைச் சாவடிக்கு அது விரிவுபடுத்தப்படும்.
"வாகன உரிமையாளர்களான அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்," என்று கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அமைச்சர் தெரி வித்தார்.
கடந்த வாரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விஇபி அமலாக்கத்தை மலேசியா நிறுத்தி வைத்தது. அப்போது உச்ச நேரத்தில் மட்டும் 'விஇபி' நிறுத்தி வைக்கப்படும் என்று மலேசியா அறிவித்திருந்தது. முன்னதாக அனைத்து வெளிநாட்டு உரிமையாளர்களும் ரேடியோ அலைவரிசை அடையாளத்துக்கு இணையத்தின் வழியாக பதிந்து கொள்ள வேண்டும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சு கேட்டுக் கொண்டது.
இதற்குப் பதிந்துகொண்டதும் வாகன நுழைவு அனுமதிக்கான அடையாளத்தைப் பொருத்திக் கொள்வதற்கான விவரங்கள் மின் அஞ்சல் வழியாக அனுப்பி வைக் கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

