மலேசியாவின் 'உத்துசான் மலாயு' பத்திரிகையின் முன்னாள் நிர்வாகத்தின்கீழ் பணிபுரிந்த ஊழியர்கள் "புதிய உத்துசான்" பணியில் அமர்த்தப்படுவர் என மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார். ஆயினும், எத்தனை பேர் வேலைக்கு அமர்த்தப்படுவர் என்று அவர் சொல்லவில்லை. "உத்துசானை புதிய நிறுவனம் ஒன்று நிர்வகிக்கும். ஊழியர்களைப் பொறுத்தவரை அவர்களில் சிலர் புதிய உத்துசானுடன் வேலையில் சேர்க்கப்படுவர்," என்று அவர் தெரிவித்தார். மலேசியாவின் ஆகப் பழைய பத்திரிகையான உத்துசான் மலாயுவில் பணியாற்றும் 862 ஊழியர்களின் வருங்காலம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு டாக்டர் மகாதீர், சுற்றுச்சூழல் சார்ந்த மாநாடு ஒன்றில் வியாழக்கிழமை (அக்டோபர் 10) பதில் அளித்தார். எந்த முன்னறிவிப்புக் கடிதமுமின்றி உத்துசான் ஊடகக் குழுமம் நேற்று தனது கதவுகளை நிரந்தரமாக மூடியபோது அங்கு பணிபுரிந்த 862 ஊழியர்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். வேறு வேலை வாய்ப்புகளையும் உத்துசான் குழுமம் அந்த ஊழியர்களுக்கு வழங்கவில்லை. அத்துடன், அந்த ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளம் இன்னமும் கொடுக்கப்படவில்லை. உத்துசான் மலேசியா பத்திரிகை, சிங்கப்பூரில் 1939ஆம் ஆண்டில் முதன்முதலாக 'உத்துசான் மலாயு' என்ற பெயரில் ஜாவி எழுத்துருவில் பிரசுரிக்கத் தொடங்கியது.
பழைய உத்துசான் மலாயு பத்திரிகையில் பணிபுரிந்தோரில் சிலருக்குத்தான் வேலை தொடரும்
1 mins read
-

