கோலாலம்பூர்: மலேசியாவின் 'உத்துசான் மலாயு' பத்திரிகையின் முன்னாள் நிர்வாகத்தின்கீழ் பணிபுரிந்த ஊழியர்கள் 'புதிய உத்துசான்' பத்திரிகையில் பணி அமர்த்தப்படுவர் என மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார்.
ஆயினும், எத்தனை பேர் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்படுவர் என்று அவர் சொல்லவில்லை. "உத்துசானை புதிய நிறுவனம் ஒன்று நிர்வகிக்கும். ஊழியர்களில் சிலர் புதிய உத்துசானில் வேலையில் சேர்க்கப்படுவர்," என்று அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் சார்ந்த மாநாடு ஒன்றில் பங்கேற்ற டாக்டர் மகாதீர், மலேசியாவின் ஆகப் பழைய பத்திரிகையான உத்துசான் மலாயுவில் பணியாற்றும் 862 ஊழியர்களின் வருங்காலம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
எந்த முன்னறிவிப்புக் கடிதமுமின்றி உத்துசான் ஊடகக் குழுமம் நேற்று முன்தினம் தனது கதவுகளை நிரந்தரமாக மூடியபோது அங்கு பணிபுரிந்த ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. வேறு வேலை வாய்ப்புகளையும் உத்துசான் குழுமம் அந்த ஊழியர்களுக்கு வழங்கவில்லை. அத்துடன், அந்த ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளம் இன்னமும் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
பிரபல மலாய்மொழி பத்திரிகையான உத்துசான் மலேசியா பத்திரிகை, சிங்கப்பூரில் 1939ஆம் ஆண்டில் முதன்முதலாக 'உத்துசான் மலாயு' என்ற பெயரில் ஜாவி எழுத்துருவில் வெளியீடு கண்டது.

