இந்திய சமூகத்தை வலுப்படுத்த 100 மி. ரிங்கிட் ஒதுக்கப்படும்

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டுக்கான மலேசியாவின் வரவுசெலவுத் திட்டத்தை அந்நாட்டின் நிதி அமைச்சர் லிம் குவான் எங் நேற்று தாக்கல் செய்தார்.

நாட்டிற்குத் தேவையான செலவுகளுக்காக 297 ரிங்கிட் பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டுக்காக ஒதுக்கப்பட்ட தொகையைவிட இது 19.5 பில்லியன் ரிங்கிட் அதிகம்.

“அடுத்த ஆண்டு 244.5 பில்லியன் பெறுமானமுள்ள வருமானம் ஈட்டப்படும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இவ்வாண்டின் வருமானத்தைவிட இது 11.2 பில்லியன் அதிகம்,” என்று அமைச்சர் லிம் கூறினார்.

வரி வருமானம் உயர்ந்துள்ளபோதிலும் பிற நாடுகளைக் காட்டிலும் மலேசியா குறைவான வரிகளை வசூலிப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், மலேசியாவின் இந்திய சமூகத்தை வலுப்படுத்த மீண்டும் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

இந்திய சமூகத்தினரின் சமூகப் பொருளியல் நிலை, திறன் மேம்பாடு, சுகாதாரம், கல்வி, பெண்கள் மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்த மானியம் பயன்படுத்தப்படும்.

“இந்திய சமூகத்தினரில் சிலர் எதிர்கொள்ளும் சவால்கள், சிரமங்கள் ஆகியவை குறித்து அரசாங்கம் தொடர்ந்து அக்கறை கொள்கிறது.

“அதேபோல, ஓராங் அஸ்லி எனப்படும் பூர்வகுடியினரின் ஒட்டுமொத்த பொருளியல் மேம்பாடு, கல்வி, உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு மேலும் 83 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும்,” என்றார் திரு லிம்.

இதற்கிடையே, மலேசியாவின் நகரப் பகுதிகளில் கட்டப்படும் அடுக்குமாடி வீடுகளை வாங்க வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச விலை குறைக்கப்படும் என்று அமைச்சர் லிம் தெரிவித்தார். 

அந்த விலை 1 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 600,000 ரிங்கிட்டுக்குக் குறைக்கப்படும்.

விற்கப்படாமல் இருக்கும் பல கொண்டோமினிய, தனியார் அடுக்குமாடி வீடுகளை விற்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜோகூர் மாநிலத்தில் மட்டும் 51,000 வீடுகள் விற்கப்படாமல் உள்ளன.

பொருள் சேவை வரியை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் மலேசிய அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சர் லிம் உறுதி செய்தார்.

தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியின்போது நடப்பில் இருந்த பொருள் சேவை வரியை பக்கத்தான் ஹரப்பான் நீக்கியது.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டம் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் இரண்டாவது பட்ஜெட் தாக்கலாகும்.