சவூதி கடற்பகுதியில் ஈரானிய எண்ணெய்க் கப்பலில் வெடிப்பு

துபாய்: சவூதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் இருந்த ஈரானிய எண்ணெய்க் கப்பலில் நேற்று வெடிப்பு ஏற்பட்டதாக ஈரானிய ஊடகம் தெரிவித்தது. வெடிப்பு காரணமாக கப்பலில் தீ மூண்டதாகக் கூறப்படுகிறது. 

இதன் விளைவாகக் கப்பலின் இரண்டு பிரதான எண்ணெய்த் தொட்டிகள் சேதமடைந்தன. இதனால் கடலுக்குள் எண்ணெய் கசிந்தது. ஆனால் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். கப்பலில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டதாகவும் எண்ணெய்க் கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய ஈரானிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அந்தக் கப்பல் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனம் இதை மறுத்தது. 

சினோப்பா எனும் எண்ணெய்க் கப்பலில்தான் வெடிப்பு ஏற்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் முதலில் கூறினர். ஆனால் பாதிக்கப்பட்ட கப்பல் சினோப்பா இல்லை என்றும் சபிட்டி என்ற பெயர் கொண்ட கப்பலில் தீச்சம்பவம் ஏற்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர். சபிட்டியின் அடையாளங்காட்டி ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சவூதி அரேபிய அதிகாரிகளின் பார்வையில் படாதிருக்க சபிட்டி கப்பல் அதன் அடையாளங்காட்டியை முடக்கி வைத்திருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் சூயஸ் கால்வாயை நெருங்கும்போது அனைத்துக் கப்பல்களும் அவற்றின் அடையாளங்காட்டியை இயக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அதே போல கடந்த இரண்டு மாதங்களாக அதிகாரிகளின் பார்வையில் படாமல் இருந்த சபிட்டி கப்பல், சூயஸ் கால்வாயிலிருந்து நூற்றுக்கணக்கான மைல் தூரத்தில் இருந்தபோதே தனது அடையாளங்காட்டியை இயக்கியது.

அண்மையில் சவூதியில் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டன. தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என சவூதி குற்றம் சாட்டியது. இதை ஈரான் மறுத்தது. 

சவூதிக்கும் ஈரானுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருக்கும் வேளையில் சவூதி கடற்பகுதியில் ஈரானிய கப்பலில் வெடிப்பு ஏற்பட்டது நிலைமையை மேலும் மோசமாக்கும் என அஞ்சப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஸ்பெயினின் கட்டலான் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலிசார் கண்ணீர்ப்புகை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி

16 Oct 2019

கட்டலான் தலைவர்களின் சிறைத் தண்டனையை எதிர்த்து ஸ்பெயினில் ஆர்ப்பாட்டம் வலுக்கிறது

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது நேற்று நீதிமன்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.  படம்: ராய்ட்டர்ஸ்

16 Oct 2019

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஸுமா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு