ஹாங்காங் ரயில் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஹாங்காங்: ஹாங்காக் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஹாங்காங் போலிசார் தெரிவித்தனர்.

ஹாங்காங் மீதான தனது கரத்தை ெபய்ஜிங் இறுக்குவதாக நம்பும் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவ்லூன் டோங் நிலையம் பயங்கரமாகத் தாக்கப்பட்டது. பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் கலகத் தடுப்பு போலிசார் அந்த ரயில் நிலையத்தை சுற்றி வளைத்து தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் முகக் கவசத்தை அணிந்து கோவ்லூன் டோங் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து சென்றனர்.

அப்போது, “சட்டவிரோதமான ஒன்று கூடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்கின்றனர். ஹாங்காங் சட்டப்படி இது குற்றச் செயலாகும். இதனால் உடனடியாக கலைந்து செல்லுங்கள்,” என்று போலிசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.

ஆனால் இதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. இந்த மசோதா தற்போது கைவிடப்பட்டாலும் நான்கு மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 1997ஆம் ஆண்டில் ஹாங்காங்கை பிரிட்டன் சீனாவிடம் ஒப்படைத்தது.

அதன் பிறகு முதல் முறையாக ஹாங்காங் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.