அதிபர் ஸி: சீனாவைப் பிளவுபடுத்த எண்ணம் கொண்டோர் அழிக்கப்படுவர்

அதிபர் ஸி: சீனாவைப் பிளவுபடுத்த எண்ணம் கொண்டோர் அழிக்கப்படுவர்

2 mins read
0dbcc9d8-5b58-4fb8-b392-d5497e2dafa9
-

பெய்ஜிங்: சீனாவைப் பிளவுபடுத்த நினைப்போர் அழிக்கப்படுவர் என்று நேப்பாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலியிவிடம் சீன அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்ததாக சீன செய்தி நிறுவனம் சின்ஹுவா நேற்று தெரிவித்தது.

சீனாவைப் பிளவுபடுத்தலாம் என்ற பிரமையில் இத்தகையோர் செயல்படுவதாக சீன மக்கள் கருதுகின்றனர் என்றார் திரு ஸி. சீனாவின் இறையாண்மையை நேப்பாளம் மிக உறுதியாக ஆதரிப்பதாக திரு ஒலி கூறினார். சீனாவுக்கு எதிராகச் செயல்படும் பிரிவினைவாதிகள் நேப்பாளத்தை ஒரு தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றார் அவர்.

இதற்கிடையே, ஹாங்காங்கில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நேற்று மீண்டும் நடத்தப்பட்டன. ஹாங்காங் எங்கும் உள்ள கடைத்தொகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர். போராட்டங்கள் காரணமாக பல கடைத்தொகுதிகள் மூடப்பட்டன. ஹாங்காங்கின் விவகாரங்களில் சீனா தலையிடுவதாகவும் கூடுதல் ஜனநாயக உரிமைகள் வேண்டும் என்பதும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை.

முகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கடைத்தொகுதிகளில் சாயங்களைப் பீய்ச்சியடித்தனர். பல்வேறு கடைத்தொகுதிகள் சேதமடைந்தன. ஹாங்காங் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு எம்டிஆர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தண்டவாளத்தில் பொருட்களை வீசினர். அந்தச் சமயத்தில் ரயில் சேவை இயங்கிக்கொண்டிருந்ததாக ஹாங்காங் போலிசார் தெரிவித்தனர். பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிதும் கவலைப்படவில்லை என்று போலிசார் கூறினர்.

1997ஆம் ஆண்டில் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தது பிரிட்டன்.

'ஒரே நாடு இரண்டு ஆட்சி' முறை எனும் கொள்கையுடன் ஹாங்காங்கை சீனா நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில், சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவை எதிர்த்து தொடங்கிய போராட்டம் போகப் போக தீவிரமடைந்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அமைதியை சீர்குலைக்க சில நாடுகள் சதி வலை பின்னுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.