எரிவாயு நிரப்பிய பலூன்கள் வெடித்து குழந்தைகள் காயம்

எரிவாயு நிரப்பிய பலூன்கள் வெடித்து குழந்தைகள் காயம்

1 mins read

புத்ராஜெயா: மலேசியாவில் உள்ள டட்டாரான் புத்ராஜெயாவில் உடற்பயிற்சி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ஹீலியம் எரிவாயுவால் நிரப்பப்பப்பட்ட பலூன்கள் வெடித்ததில் குழந்தைகள் உட்பட 16 பங்கேற்பாளர்கள் காயமடைந்தனர்.

ஒன்பது குழந்தைகளும் ஏழு பெரியவர்களும் காயமடைந்ததாக மலேசிய ஊடகம் தெரிவித்தது. மலேசியக் கல்வி அமைச்சின் 2019 தேசிய விளையாட்டுத் துறை மாத நிகழ்வு நிறைவடைய இருந்தபோது பலூன்கள் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்கள் உடனடியாக புத்ராஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

கயிற்றைக் கட்டப்படுத்தும் கொக்கியை வெட்ட லைட்டர் பயன்படுத்தப்பட்டபோது பலூன் வெடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல என்றும் யாரையும் கைது செய்யவில்லை என்றும் போலிசார் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்று புத்ராஜெயா மருத்துவமனையின் அவசரகாலப் பிரிவின் தலைவர் டாக்டர் கைரூல் நிசாம் ஹசான் கூறினார்.

"அவர்களது உடல்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. புருவங்கள், முடி, கைகள் போன்ற இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன," என்றார் அவர்.

மலேசியத் துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தோருக்கு ஆறுதல் கூறினார்.