வடகிழக்கு சிரியாவில் மோசமடையும் பதற்றநிலை

வடகிழக்கு சிரியாவில் மோசமடையும் பதற்றநிலை

1 mins read
f82143f0-aae6-457c-b666-22106c6f275f
குர்தியப் படைகளை நோக்கிச் சுடும் துருக்கி ஆதரவுப் போராளி. படம்: ஏஎஃப்பி -

வியேன்னா: சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் துருக்கியின் தலைமையிலான சிரியப் போராளிகளுக்கும் குர்தியப் போராளிகளுக்கும் இடையிலான சண்டை தீவரமடைந்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அவர்களது இருப்பிடங்களை இழந்து தவிக்கின்றனர்.

துருக்கியுடனான எல்லைப் பகுதிக்கு அருகில் இருக்கும் டெல் அபியாத், ராஸ் அல் ஈன் ஆகிய நகரங்களில் 130,000க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்தனர்.

சண்டை மோசமடையும் என்று கூறப்படுவதால் உயிருக்கு அஞ்சி அவர்கள் தங்கள் சொந்த நகரங்களைவிட்டு வெளியேறுகின்றனர்.

அடுத்த சில நாட்களில் கிட்டத்தட்ட 400,000 பேர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கக்கூடும் என்று ஐநாவின் மனிதாபிமானப் பிரிவு கவலை தெரிவித்துள்ளது.

பாதிப்புக்குள்ளானோருக்கு உதவியும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்று அது கூறியது.

ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரின் காரணமாக துருக்கியில் தஞ்சமடைந்த ஏறத்தாழ 3.6 மில்லியன் சிரியர்களை சிரியாவுக்கு மீண்டும் அனுப்பத் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்காக சிரியாவில் பாதுகாப்பான இடங்களை உருவாக்கவும் சிரியாவுக்குள் படைகளை அனுப்பியுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

துருக்கி ஆதரவுடன் செயல்படும் படைகள் வடகிழக்கு சிரியாவில் உள்ள பொது, தனியார் மருத்துவமனைகளைத் தாக்கியதை அடுத்து அவை மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான போரில் குர்தியப் படைகள் பெரும் பங்களித்தன. தற்போது துருக்கிப் படைகள் குர்தியப் போராளிகளைத் தாக்குவதை அமெரிக்கா வேடிக்கை பார்க்கிறது என்று அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன. குர்தியப் படைகள் வீழ்ந்தால் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மீண்டும் தலைதூக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.