பேருந்துப் பயணிகளைக் கடத்திய ராக்கைன் போராளிகள்

பேருந்துப் பயணிகளைக் கடத்திய ராக்கைன் போராளிகள்

2 mins read
ab29f382-ffda-4d13-a46f-133a3c455c38
-

யங்கூன்: மியன்மாரின் கிராமப் பகுதியில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தோரை ராக்கைன் போராளிகள் கடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர்களில் பலர் தீயணைப்பு வீரர்களும் கட்டுமான ஊழியர்களும் அடங்குவர். மொத்தம் 31 பேர் கடத்தப்பட்டதாக மியன்மார் அதிகாரிகள் கூறினர்.

விளையாட்டுக் குழுவினராக வேடமிட்டு பேருந்தில் ஏறிய போராளிகள் அந்த 31 பேரையும் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. ராக்கைன் மாநிலத்தின் தலைநகர் சிட்வீயில் சென்றுகொண்டிருந்த பேருந்தை ஆடவர் ஒருவர் நிறுத்தியதாக மியன்மார் அரசாங்கத்தின் ஆதரவில் இயங்கும் குளோபல் நியூ லைட் ஆஃப் மியன்மார் நாளிதழ் குறிப்பிட்டது.

பேருந்து நின்றதும் அருகில் இருந்த வனப்பகுதியிலிருந்து 18 போராளிகள் ஓடி வந்து பேருந்தில் ஏறியதாகக் கூறப்படுகிறது.

போராளிகள் அலைவரும் விளையாட்டுச் சீருடை அணிந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகளிடம் துப்பாக்கியைக் காட்டிய போராளிகள் அவர்களை பேருந்திலிருந்து இறங்கும்படி உத்தரவிட்டனர். பேருந்திலிருந்து இறங்கிய பயணிகளைப் போராளிகள் கடத்திச் சென்றனர். "நாங்கள் அவர்களைத் தேடி வருகிறோம்," என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் மியன்மார் ராணுவத்தின் உயர் அதிகாரி கர்னல் வின் ஸோ கூறினார்.

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த தீயணைப்பு வீரர்களை ராணுவ வீரர்கள் எனப் போராளிகள் தவறாக நினைத்திருக்கலாம் என்றார் அவர். மியன்மாரிடமிருந்து பிரிந்து ராக்கைன் மாநிலம் தனிநாடாக வேண்டும் என்ற இலக்குடன் சண்டை போட்டு வரும் அராக்கான் போராளி அமைப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. போராளிகளை அழிக்க ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை ராக்கைன் மாநிலத்துக்கு மியன்மார் அரசாங்கம் அனுப்பிவைத்துள்ளது.

மியன்மார் ராணுவத்தினர் ராக்கைன் மாநிலத்தில் பொதுமக்களைக் கடத்தி சித்ரவதை செய்வதாக மனித உரிமை அமைப்புகள் குறைகூறுகின்றன. ஆனால் போராளிகள் ராணுவத்தினரைத் துப்பாக்கியால் சுடுவதாகவும் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதாகவும் அதிகாரிகளைக் கடத்துவதாகவும் மியன்மார் ராணுவம் கூறுகிறது.