19 ஆண்டுகள் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு $7 மில்லியன் இழப்பீடு

1 mins read
6142cbd7-42c6-4b33-ad13-92ca920fe23a
-

சிட்னி: எந்தவொரு தவறும் செய்யாமல் ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆஸ்திரேலிய சிறையில் கழித்த பொருளியல் நிபுணர் ஒருவருக்கு நேற்று இழப்பீடாக வழங்க A$7 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டு போலிஸ் அதிகாரி கோலின் வின்செஸ்ட்டர் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் அரசாங்க ஊழியரான டேவிட் ஈஸ்ட்மனுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு பல முறை மேல் முறையீடு செய்தார் திரு டேவிட். கடைசியாக 2014ஆம் ஆண்டு அவரது வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நீதிமன்றம் வழக்கை விலக்கி டேவிட் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து அவரை விடுவித்தது. ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் திரு டேவிட்டுக்கு இழப்பீடாக A$7 மில்லியன் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

"வேலை, வருமானத்தை இழந்ததுடன் எனக்கென ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை இழந்து விட்டேன்.

"அதைவிடப் பேரிழப்பாக நான் கருதுவது நான் சிறையில் இருக்கும்போது எனது தாய், சகோதரிகள் மரணம் அடைந்தனர்," என்று நீதிமன்றத்தில் கண்ணீர்மல்கக் கூறினார் திரு டேவிட்.

அத்துடன் 2006ஆம் ஆண்டு சிறையில் இருக்கும்போது ஒரு கொலைக்குச் சாட்சியாக இருந்ததால் சக கைதியால் தாக்கப்பட்டால். அந்தத் தாக்குதலுக்குப் பின் அவருடைய ஒரு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.