சுடச் சுடச் செய்திகள்

மும்பையில் பிறந்த பொருளியல் வல்லுநருக்கும் அவரது மனைவிக்கும் நோபல் பரிசு

அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் அமெரிக்கரான மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு இந்த ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

உலகளாவிய வறுமையை ஒழிப்பது தொடர்பான பொருளாதார ஆய்வுக்காக இம்மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது என்றும் பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்கிறது என்பதை அரசு உணர்வதும் அதிகரித்து வருகிறது என்றும் திரு அபிஜித் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கை பொருளியல் பிரச்சினையை உருவாக்கும் என்று 2016ஆம் ஆண்டிலேயே கணித்தவர் திரு அபிஜித்.

மும்பையில் பிறந்த அபிஜித், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1981ஆம் ஆண்டு அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். 1983ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
 அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் 1988ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
 
2011ஆம் ஆண்டு ‘ஃபாரின் பாலிசி’ பத்திரிகையில் உலகின் 100 சிந்தனையாளர்களில் ஒருவராக இடம் பிடித்த அபிஜித், ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் மூன்று நூல்களையும் அபிஜித் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் அபிஜித்தும் அவரது மனைவி எஸ்தரும் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். 

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெறும் இரண்டாவது பெண்ணான எஸ்தர், பாரிசில் பிறந்து  அமெரிக்காவில் குடியேறியவர். மேலும், மிக இளம் வயதில் (46 வயதில்) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்தத் தம்பதியுடன் நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்ளும் கிரெமர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் பொருளியல் ஆலோசகராகவும் இருந்த இவர், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

திரு அபிஜித்துக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.