சுடச் சுடச் செய்திகள்

எல்டிடிஇ உடனான சீமானின் தொடர்பை ஆராயும் மலேசியா

 

இலங்கையின் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் (எல்டிடிஇ) தொடர்பிலிருந்த சந்தேகத்தின்பேரில் மலேசியாவில் கைதான அரசியல்வாதிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த தமிழ்நாட்டு அரசியல்வாதியின்மீது மலேசிய அதிகாரிகளின் கவனம் திரும்பியுள்ளது. 

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என நம்பப்படும் சீமான், தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகிக்கிறார். 

இவர் மலேசியாவுக்குப் பலமுறை பயணம் சென்றதாகவும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிப்பதற்கு ஆதரவு திரட்ட மலேசிய அரசியல்வாதிகளைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

முன்னணி அரசியல்வாதிகளுடன் சீமான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. 

தம்பி, பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, ஆனந்தம் போன்ற படங்களை இயக்கிய முன்னாள் நடிகரும் இயக்குநருமான 52 வயது சீமான், பொறி படத்தில் மலேசிய தொழிலதிபராக நடித்திருந்தார். 

சீமான் மலேசியாவுக்குப் பலமுறை வந்ததும் உள்ளூர் அரசியல்வாதிகளைச் சந்தித்ததும் போலிசாருக்குத் தெரியும் என புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் துணை ஆணையர் அயுப் கான் தெரிவித்தார். 

“காரண அடிப்படை இருந்தால், அவர் நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கும்படி குடிநுழைவுத் துறையிடம் கேட்டுக்கொள்வோம். ஆயினும், விடுதலைப்புலிகளுக்கு நிதி அனுப்புவதில் அல்லது அந்தப் பயங்கரவாத இயக்கத்தைப் பரப்புவதில் அவருக்கு எந்த அளவுக்குப் பங்கு இருக்கிறது என்பதை நாங்கள் விசாரிப்போம்,” என கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். 

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தொடர்பிலான புலன்விசாரணைக்காக, கடந்த சனிக்கிழமை ஐந்து ஆடவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். 

மலாக்காவின் பெர்படனான் பூமி ஹிஜாவின் நிர்வாக அதிகாரி, 52 வயது ஆசிரியர், மலாக்கா நகர மன்ற அதிகாரி, தொழிற்சாலை ஊழியர், பாதுகாவல் மேலாளர் ஆகியோர் அந்த ஐவர். 

அதற்கு முன்னதாக, கடந்த வியாழக்கிழமை எழுவர் கைது செய்யப்பட்டனர். 

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மலேசியா சட்டவிரோத அமைப்பாக வகைப்படுத்தியுள்ளது. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon