ஒன்பது ஆண்டுகளாக பண்ணை வீட்டின் ரகசிய அறையில் வாழ்ந்து வந்த குடும்பம்

2 mins read
8421e255-a0de-43eb-a024-e3ff771baa14
மரங்களுக்கிடையே மறைந்திருக்கும் பண்ணை வீட்டின் ஒரு ரகசிய அறையில் ஒன்பது ஆண்டுகளாக ஒரு குடும்பம் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளது. படம்: ஏஎஃப்பி -

ஆம்ஸ்டர்டாம்: வெளியுலகத் தொடர்புகளிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்ட ஒரு குடும்பம், பண்ணை வீட்டின் ஒரு ரகசிய அறையில் ஒன்பது ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததாக நேற்று முன்தினம் நெதர்லாந்து அதிகாரிகள் கூறினர்.

அவ்வீட்டிலிருந்து தப்பித்த 25 வயது வாலிபர் ஒருவர், அருகில் இருந்த ஓர் உணவுக்கடைக்குள் சென்றதாகவும் தான் ஒன்பது ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்றும் கூறியதாக அக்கடை ஊழியர் ஒருவர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். வீட்டை விட்டு ஓடி வந்ததுடன் தனக்கு அவசரமாக உதவி தேவைப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

தகவலைக் கொண்டு அவ்வீட்டிற்குச் சென்ற போலிசார், வீட்டுக் கூடத்தில் இருந்த ஓர் அலமாரியின் பின்னால் இருந்த படிக்கட்டு வழி வீட்டுக்குக் கீழ் இருந்த நிலத்தடி அறையில் ஐந்து சகோதரர்களுடன் அவர்களின் தந்தை என்று நம்பப்படும் ஓர் ஆடவரையும் கண்டுபிடித்தனர். 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து சகோதரர்களுடன் அவர்களின் தந்தை என்று கூறப்படுபவரும் வீட்டில் இருந்த ஒரு சிறிய அறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

பூட்டக்கூடிய அந்த அறையில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக தலைமறைவாக அக்குடும்பம் இருந்திருக்கக்கூடும் என்று போலிசார் கூறினர். அத்துடன் விருப்பப்பட்டே அம்முடிவை எடுத்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. உலகம் ஒரு முடிவுக்கு வரப்போவதாக நம்பி அக்குடும்பம் தங்களைத் தானே தனிமைப்படுத்தி வாழ்ந்திருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

பண்ணை வீட்டில் குடியேறுவதற்கு முன்னரே சகோதரர்களின் தாயார் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

நிலத்தின் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளையும் அங்குக் கிடைத்த விலங்குகளையும் கொண்டு அக்குடும்பம் உயிர் வாழ்ந்துவந்ததாக நம்பப்படுகிறது.

நெதர்லாந்தின் ருய்ணர்வொல்ட் கிராமம் அருகே இச்சம்பவம் நடந்துள்ளதைக் கேள்விப்பட்ட மக்கள், அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆடவரை மட்டுமே இதுவரை பார்த்துள்ளதாகவும் மற்ற ஐவரையும் பார்த்ததில்லை என்றும் அவர்கள் கூறினர்.

இதன் தொடர்பில் 58 வயதுடைய ஆஸ்திரிய ஆடவர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.