சுகாதாரக் குறைவினால் 16 உணவகங்கள் மூடப்பட்டன

சுகாதாரக் குறைவினால் 16 உணவகங்கள் மூடப்பட்டன

1 mins read
8a203f11-fde5-46c4-92b7-a1ce226ab30f
மூடப்பட்ட கடைகளில் ஒன்றின் சுவர் மீது அறிக்கை ஒட்டப்பட்டுள்ளது. (படம்: த ஸ்டார்) -

சிலாங்கூர் சுகாதாரத் துறையும் ஹுலு லங்காட் மாவட்ட அலுவலகமும் நடத்திய கூட்டு நடவடிக்கையின்போது, சுகாதார விதிமுறைகளை மீறியதற்காக பண்டார் மகோட்டா செராஸிலுள்ள 16 உணவகங்களை மூட உத்தரவிடப்பட்டது.

நேற்று பிற்பகல் மூன்று மணி வரை 70 உணவகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது, பெருச்சாளிகளின் எச்சம், சிறுநீர், இறந்துகிடந்த கரப்பான்பூச்சிகள், தரையிலுள்ள வெடிப்புகளில் தேங்கிக்கிடந்த தண்ணீர் போன்றவற்றைச் சோதனைக் குழுவினர் கண்டனர்.

இப்பகுதியிலுள்ள உணவகங்களையும் உணவுக் கடைகளையும் சோதனையிட 88க்கும் மேலான சுகாதார அதிகாரிகள் களத்தில் இறங்கினார்கள். உணவுச்சட்ட விதிமுறைகளைக் கடைகள் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காகத் திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹுலு லங்காட் மாவட்டத்தின் சுகாதார அதிகாரி டாக்டர் சய்லிஸா சுலி தெரிவித்தார்.

"உணவகங்களில் தூய்மை பற்றி எங்களுக்குப் புகார்கள் கிடைத்தன. உணவில் ஈக்களும் தலைமுடியும் கிடப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் செய்தனர்.

"எங்கள் அதிகாரிகளின் திடீர் சோதனையைத் தொடர்ந்து, 16 உணவகங்களை மூட உத்தரவிடப்பட்டது. அதோடு மொத்தம் 61,350 ரிங்கிட் அபராதம் விதிக்கும் 98 அறிக்கைகளும் வெளியிடப்பட்டன," என அவர் தெரிவித்தார்.