பிபிசி பட்டியலில் இடம்பெற்ற முதல் சிங்கப்பூர் பெண்மனி

பிபிசி பட்டியலில் இடம்பெற்ற முதல் சிங்கப்பூர் பெண்மனி

2 mins read
18aa4d12-dcdc-4ee0-b2b8-d9298350a0e8
-

பிபிசியின் உந்துசக்தியாக விளங்கும் உலகின் தலைசிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் முதல் சிங்கப்பூர் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியான 81 வயது சிஸ்டர் ஜெராட் ஃபெர்ணான்டஸ். மரண தண்டனை பெற்ற கைதிகளுக்கு ஆலோசகராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய அவர் 2017ல் அப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

ஆலோசகராகப் பணிபுரிந்த சமயத்தில் 18 கைதிகளுடனேயே இருந்து, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்வரை அவர்களுக்குத் துணையாக இருந்தார். அவர்களில் 1981ஆம் ஆண்டு தோ பாயோவில் சமயச் சடங்குக்காக இரு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் சமயச் சடங்கு செய்பவராக இருந்த ஏட்ரியன் லிம்மிற்குத் துணைபுரிந்த கேத்தரின் டான் மூய் சூ, ஹோ கா கொங் இருவரும் அடங்குவர்.

பிபிசியின் இந்த ஆண்டு பட்டியல் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 15 வயது முதல் 98 வயது வரையுள்ள பெண்களைச் சிறப்பித்துள்ளது. இந்த ஆண்டு பட்டியலின் கருப்பொருள் "பெண்களால் ஆன எதிர்காலம்" என்பதாகும். எதிர்காலம் பெண்களால் முன்னெடுக்கப்பட்டால்எப்படியிருக்கும் என்பதை இப்பட்டியல் ஆராய்கிறது.

பருவநிலை ஆர்வலர் சுவீடன் நாட்டின் இளையர் கிரேடா தன்பர்க், திருநங்கை உரிமைகளுக்காகப் போராடும் மலேசியாவின் நிஷா அயுப் ஆகியோரும் அடங்குவர். நிஷா 21 வயதில் ஆண்கள் சிறைக்கு அனுப்பப்பட்டவர். பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பல பெண்கள், எல்லா இடங்களிலும் வாழும் பெண்களைப் பிரதிநிதித்து மாற்றங்களுக்காகப் போராடுபவர்கள் என்று பிபிசி குறிப்பிட்டது. வரும் 2030ல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்த தங்களது பார்வையை அவர்கள் தருகிறார்கள் என்றும் அது தெரிவித்தது.

இந்தச் சிறப்பு தாம் எதிர்பாராத ஆச்சரியம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் ்டைம்சிடம் கூறிய சிஸ்டர் ஜெராட், "பரிசுகளுக்காகவும் விருதுகளுக்காகவும் நான் பணிபுரிவதில்லை. 81 வயதில் எனக்கு விருது கிடைக்கும் என்றும் நான் நினைத்திருக்கவில்லை," என்றார்.

"தினமும் மற்றவர்களுக்காக வாழும் பல பெண்கள் இருக்கிறார்கள். மற்றவர்களுக்காக உழைப்பவர்களை நான் மதிக்கிறேன். அக்கறையையும் பரிவையும் மற்றவர்களிடம் பரப்ப முடிந்தது எனக்கு மகிழ்ச்சி தருகிறது," என்றார் அவர். சிறைசாலையில் தொண்டாற்றும் கத்தோலிக்க குழுவை அவர் 1977ல் இணைந்து தொடங்கினார். தண்டிக்கப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை தேவை என்பதால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவதாக அவர் விளக்கினார்.