தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

13 வயது சிறுவனை நம்பியிருக்கும் ஜப்பானியப் பேரரசின் எதிர்காலம்

1 mins read
e1c813b4-cc17-407d-8b78-329097acf522
ஜப்பானின் ஆக இளைய இளவரசர் ஹிசாஹிட்டோ (நடுவில்) அவரது தந்தை இளவரசர் அக்கிஷினோ, தாய் இளவரசி கிக்கோ ஆகியோருடன். படம்: ராய்ட்டர்ஸ் -

ஜப்பானின் ஆக இளைய இளவரசர் ஹிசாஹிட்டோ கடந்த ஆகஸ்ட் மாதம் முதன்முதலாக பூட்டானுக்கு வெளிநாட்டுப் பயணம் சென்றபோது, எதிர்காலப் பேரரசரை உலகிற்கு அறிமுகப்படுத்தும் பயணமாக அது கருதப்பட்டது.

ஹிசாஹிட்டோவின் பெரியப்பா நருஹிட்டோ பேரரசராகப் பதவி ஏற்று இரண்டே மாதங்களில் ஹிசாஹிட்டோ வெளிநாட்டுப் பயணம் சென்றார்.

பாரம்பரிய 'ஹக்காமா' கிமோனோ ஆடையில் உபசரிப்பாளர்களுக்கு வணக்கம் கூறி, வில்வித்தையிலும் தனது கைவரிசையைக் காட்டினார் ஹிசாஹிட்டோ.

முன்னாள் பேரரசர் அக்கிஹிட்டோ பதவி விலகியதைத் தொடர்ந்து மே 1ஆம் தேதி பேரரசராகப் பதவியேற்ற 59 வயது நருஹிட்டோ, அடுத்த செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வ சடங்கில் வெளிநாட்டு, உள்நாட்டுப் பிரமுகர்களின் முன்னிலையில் அரியணை ஏறுவார்.

ஜப்பானில் ஆண் வாரிசுகள் மட்டுமே அரியணை ஏறமுடியும்.

பதின்மூன்று வயதாகும் ஹிசாஹிட்டோ, அவரது தலைமுறையில் ஒரே ஆண் வாரிசு. பேரரசரின் தம்பியும் அவரது அப்பாவுமான 53 வயது பட்டத்து இளவரசர் அக்கிஷினோவுக்குப் பிறகு அரியணை ஏறத் தகுதிபெறுகிறார் ஹிசாஹிட்டோ.

ஜப்பானிய அரசக் குடும்பத்தில் 1965ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆண் வாரிசுகள் பிறக்கவே இல்லை. பேரரசரின் மனைவி மசாகோ, திருமணமாகி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இளவரசி அய்கோவைப் பெற்றெடுத்தார்.

அச்சமயத்தில், பெண்கள் அரியணை ஏற அனுமதிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்த பரிசீலனை செய்யப்பட்டது.

ஆனால், இளவரசர் ஹிசாஹிட்டோ 2006ஆம் ஆண்டு பிறந்ததைத் தொடர்ந்து, அந்தப் பரிசீலனை நிறுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்