சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர் - ஜோகூர் பாரு எம்ஆர்டி ரயில் பதை திட்டத்துக்கு மகாதீர் ஒப்புதல்

சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான எம்ஆர்டி ரயில் பாதை (ஆர்டிஎஸ்) அமைக்கும் பணியைத் தொடர மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், திட்டத்தின் அமலாக்கம் சற்று தாமதமாகும் என்று நேற்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ரயில் பாதைத் திட்டத்தின் தொடர்பில் மலேசிய அமைச்சரவை இரு வாரங்களுக்குள் முடிவு செய்யும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் கூறியதைத் தொடர்ந்து மலேசியப் பிரதமரின் ஒப்புதல் வெளியாகியுள்ளது.

ஜோகூர் பாருவின் புக்கிட் சாகரில் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தருக்குச் சொந்தமான நிலம் தொடர்பிலான பிரச்சினைகளை மலேசிய அரசாங்கம் தீர்த்துவிட்டதா என்று கேட்ட செய்தியாளர்களிடம் டாக்டர் மகாதீர் உறுதியான பதில் எதையும் குறிப்பிடவில்லை என்றும் அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் கூறியதாகவும் மலேசியாக்கினி செய்தி இணையத்தளம் குறிப்பிட்டது.

ஜோகூர் பாருவின் புக்கிட் சாகர் நிலையத்துக்கும் சிங்கப்பூரில் அமைக்கப்படவுள்ள உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்துக்கும் இடையே ஆர்டிஎஸ் அமைக்கப்படும்.