சுடச் சுடச் செய்திகள்

விமானம் ஆட்டம்கண்டதால் லாகூரில் தங்கிய பிரிட்டிஷ் அரச தம்பதி

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம், அவரது துணைவியார் கேட் ஆகியோர் லாகூரில்  ஓரிரவைக் கழிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். 

பாகிஸ்தானுக்கு ஐந்து நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் ஒவ்வொரு நாளின் நடவடிக்கைக்குப் பிறகு இஸ்லாமாபாத்துக்கு திரும்ப வேண்டும்.

நேற்று (அக்டோபர் 17) லாகூரில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்ற இருவரும் இஸ்லாமாபாத்துக்கு விமானம் மூலம் திரும்பிக்கொண்டிருந்தனர்.

லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்துக்கு விமானப் பயண நேரம் சுமார் 26 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், இடி, மின்னல் உட்பட மிகவும் மோசமான வானிலை காரணமாக அவர்கள் பயணம் செய்த விமானம் ஆட்டம்கண்டதுடன், இரண்டு முறை முயன்றும் இஸ்லாமாபாத்தில் தரையிறங்க முடியாமல் போனது.

அருகில் உள்ள ராவல்பிண்டி விமான நிலையத்திலும் இதே சூழல் நிலவியது. வேறுவழியின்றி விமானத்தை லாகூருக்கே திருப்பவேண்டியதாயிற்று.

இரண்டு மணி நேரம் நீடித்த இந்தப் பயணத்தின் முடிவில் தம்பதியர் லாகூரில் நேற்றிரவு தங்கினர். அதற்காக பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், அவர்கள் லாகூரில் தங்கியது பற்றிய செய்திகளை ஊடகங்களில் பரப்பவேண்டாம் என அவர்களுடன் இருந்த செய்தியாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பயணத்தின் ஐந்தாவது நாளான இன்று காலை தம்பதியர் இஸ்லாமாபாத்துக்கு விமானம் மூலம் சென்று, திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்றனர். பிற்பகலில் அவர்கள் லண்டனுக்குப் புறப்படுவர் என்று கூறப்பட்டது.