சிரியாவில் போர்க்குற்றம்: துருக்கி மீது குற்றச்சாட்டு

சிரியாவில் போர்க்குற்றம்: துருக்கி மீது குற்றச்சாட்டு

1 mins read

பெய்ரூட்: துருக்கிய ராணுவப் படையும் சிரியாவின் கிளர்ச்சிப் படையினரின் கூட்டணியும் வடகிழக்கு சிரியாவில் சுட்டுக்கொல்வது உள்ளிட்ட போர்க்குற்றங்களைச் செய்து வருவதாக அனைத்துலகப் பொது மன்னிப்பு வாரியம் (ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்) குற்றம்சாட்டியுள்ளது.

குறிப்பாக துருக்கியப் படையினர் இம்மாதம் 9ஆம் தேதி விதியை மீறி அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததோடு, சட்டத்திற்குப் புறம்பாக ஏராளமானோரைத் தாக்கியும் உள்ளதாக பொது மன்னிப்பு வாரியம் கூறியுள்ளது.

இதற்கு உடனடியாக பதில் அளிக்காத துருக்கி, தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

"இருப்பினும், சிரியாவின் வடகிழக்குப் பகுதியின் எல்லையில் அமைந்துள்ள குர்தியர்களுக்கான பாதுகாப்பு முகாமை அகற்றுவதையே துருக்கி இலக்காகக் கொண்டுள்ளது. இம்மாதம் 6ஆம் தேதி நடந்த அந்தத் தாக்குதலில் பொதுமக்களில் 72 பேராவது மாண்டிருக்கலாம்," என்று சிரியாவின் மனித உரிமை ஆணைய கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.

பொதுமக்களைக் கொன்று குவித்துவரும் சிரியா, கிளர்ச்சிப் படையினரின் செயல் மிகவும் வெட்கக்கேடானது என்று பொது மன்னிப்பு வாரியம் சாடியுள்ளது.

குர்தியப் பெண் அரசியல்வாதியான ஹெவ்ரின் காலஃப் என்பவரும் அவரது மெய்க்காப்பாளரும் சிரிய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இன்னொரு சம்பவத்தில் மேலும் இருவரைக் கொன்றதோடு உள்ளூர் மருத்துவ அமைப்பு ஒன்றின் ஊழியர்கள் இருவரையும் துருக்கியின் சிரிய கூட்டணிப் படையினர் கடத்திச் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.