பெட்டாலிங் ஜெயா: டுரியான் பழங்களில் ஹெராயின் வகை போதைப்பொருளை மறைத்து கடத்த முயன்ற 34 வயது பெண்ணை மலேசியப் போலிசார் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் பொட்டலங்கள் இருந்த டுரியான்களை மலேசியாவின் சுபாங் விமான நிலையம் வழியாக ஹாங்காங்கிற்குக் கடத்த அப்பெண் முயன்றதாகக் கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட 6.13 கிலோ ஹெராயினின் மதிப்பு $311,500. கடந்த திங்கட்கிழமையன்று சரக்கு நிறுவனம் ஒன்றில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டபோது டுரியான்களுக்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
சரக்கு நிறுவனத்தில் டுரியான்கள் கொண்ட 20 பெட்டிகள் இருந்ததாகவும் அவற்றில் நான்கு பெட்டிகளில் உள்ள டுரியான்களுக்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் மலேசிய சுங்கத்துறை மத்திய மண்டலப் பிரிவின் தலைமை இயக்குநர் சுல்கார்னைன் முகம்மது யூசோஃப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போதைப்பொருளைக் கடத்த முயன்ற பெண் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

