இஸ்தான்புல்: வடகிழக்கு சிரியாவில் கண்காணிப்புச் சாவடிகளை துருக்கி அமைக்கும் என்று துருக்கி அதிபர் எர்டொவான் தெரிவித்துள்ளார். துருக்கியின் இறையாண்மையைக் காக்க சிரியாவுடனான எல்லைப் பகுதியில் மட்டுமல்லாது சிரியாவிலும் 'பாதுகாப்பு பகுதிகள்' அமைக்கப்படும் என்றார் அவர்.
சிரியாவில் உள்ள பேஷ்மெர்கா குர்தியப் போராளிகளை துருக்கி பயங்கரவாதிகளாகக் கருதுகிறது. சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் தங்களுக்கென்று தனிநாட்டைக் குர்தியர்கள் கேட்டு வருகின்றனர். அவ்வாறு ஏதும் நடந்தால் அது துருக்கிக்கு ஆபத்தாக முடியும் என்று துருக்கி நம்புகிறது. எனவே, துருக்கி எல்லைப் பகுதியிலிருந்து குர்தியர்களை விரட்டியடிக்க சிரியாவுக்குள் தமது ஆதரவுப் படைகளை அனுப்பியுள்ளார் அதிபர் எர்டொவான்.
இந்நிலையில், ஐந்து நாள் சண்டை நிறுத்தம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. துருக்கி எல்லைப் பகுதியிலிருந்து குர்தியப் படைகள் பின்வாங்க சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. சிரியாவுக்குள் 480 கிலோமீட்டர் நிலப்பரப்பை துருக்கியின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்போவதாக அதிபர் எர்டொவான் தெரிவித்தார்.
சண்டை நிறுத்தம் நடப்பில் இருக்கும்போதும் சிரியாவின் எல்லையோர நகரமான ராஸ் அல் அயினில் துருக்கி ஆதரவுப் படையினர் நேற்று முன்தினம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாகவும் சண்டை நிறுத்தத்தை மீறியதாகவும் குர்தியப் படைகளின் செய்தித்தொடர்பாளர் கூறினார். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் நேற்று முன்தினம் காலையில் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாக எல்லைப் பகுதியில் உள்ள ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். பெருமளவிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் முழு சண்டை நிறுத்தம் நடப்புக்கு வர கொஞ்சம் நேரம் எடுக்கும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
அதிபர் எர்டொவானிடம் பேசியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். சண்டை நிறுத்தம் நடப்பில் இருந்தும் ஒருசில தாக்குதல்கள் நடந்ததாக அதிபர் எர்டொவான் கூறியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால் அந்தத் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட்டதாக அதிபர் எர்டொவான் தம்மிடம் கூறியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
"சண்டை நிறுத்தம் வெற்றி அடைய வேண்டும் என அதிபர் எர்டொவான் விரும்புகிறார் அதேபோல குர்தியர்களும் விரும்புகின்றனர். பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று குர்தியர்கள் விரும்புகின்றனர்," என்றார் அதிபர் டிரம்ப்.
இதற்கிடையே, சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை மீட்டுக்கொண்டது அதிபர் டிரம்ப் செய்த பெரும் பிழை என்று அமெரிக்க செனட் தலைவர் மிட்ச் மெக்கோனேல் சாடியுள்ளார்.
சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை மீட்டுக்கொண்டதால் அமெரிக்க மக்களின் பாதுகாப்பு பாதிப்படையும் என்றும் எதிரிப் படைகள் உயிர்ப்பிக்கப்படும் என்றும் முக்கிய கூட்டணிகள் பலவீனம் அடையும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

