புதுடெல்லி: நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட பாலின் தரத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்ததில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளில் 37.7% தரமற்றவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே, அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் 1,103 நகரங்களில் இருந்து மொத்தம் 6,432 பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
அவற்றில் சுமார் 40.5% பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகள். 12 மாதிரிகளில் கலப்படம் இருந்தது தெரியவந்தது.
இதில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், கேரள ஆகிய மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட பால் மாதிரிகளில் அதிக கலப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலப்படம் மற்றும் தரநிலைகளைச் சரிபார்க்குமாறு முறைப்படுத்தப்பட்ட பால்பொருள்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தரநிலைகளுக்கு ஏற்ப பால் இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
"சாமானிய மக்கள் பாலில் கலப்படம் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் தூய்மைக்கேடான பால் கலப்படத்தையும்விட ஆபத்தானது என்பதை எங்கள் ஆய்வில் தெரியப்படுத்தியுள்ளோம்," என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு தலைமைச் செயலதிகாரி பவன் அகர்வால் தெரிவித்தார்.
அதாவது, பூஞ்சைக்காளான் வகையான எஃப்ளேடாக்சின்-எம்1, நோயெதிர்ப்பு மருந்துகள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவை பதப்படுத்தப்பட்ட பாலில் அதிகமிருப்பதாக பவன் அகர்வால் மேலும் தெரிவித்தார்.
"எஃப்ளேடாக்சின்-எம்1 என்ற பூஞ்சைக்காளான் கலவை பதப்படுத்தப்பட்ட பாலில் அதிகமிருக்கிறது. பதப்படுத்தப்படாத பாலில் அவ்வளவாக இல்லை. இதில் தமிழ்நாடு, டெல்லி, கேரள மாநில பால்களில் இந்த எஃப்ளேடாக்சின்-எம்1 கலப்பு அதிகம் உள்ளது. இது பாலில் இருப்பதற்கு மாட்டுத் தீவனம் காரணமாக இருக்கலாம். பால், மாட்டுத்தீவனம் உட்பட மூலப்பொருட்களின் தொடர்பில் நாட்டில் முறையான ஒழுங்குமுறைகள் இல்லை. இந்தியாவிலேயே முதல்முறையாக, இந்த ஆய்வில்தான் பாலில் எஃப்ளேடாக்சின்-எம்1 இருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல், பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் கொழுப்பு, சர்க்கரை, மால்ட்டோடெக்ஸ்ட்ரின் போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட அதிகமுள்ளது தெரியவந்துள்ளது. பதப்படுத்தாத பாலிலும் தரநிலைகளுக்கு ஒத்துவராத நிலையே அதிகம் உள்ளது.
கலப்படம், தூய்மைக்கேடு ஆகியவற்றின் தொடர்பில் பால்வளத்துறை அடுத்த ஆறு மாதங்களுக்குள் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம் என்றார் பவன் அகர்வால்.

