புக்கெட்: சுற்றுப்பயணிகளிடையே பிரபலமான தாய்லாந்தின் புக்கெட் தீவில் ஹோட்டல் அறைகளுக்கான கட்டணம் சரிந்துள்ளது. அத்
தீவுக்கு சீன சுற்றுப்பயணிகளின் வருகை குறைந்துள்ளதே அதற்குக் காரணம் என ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் நீடிப்பதன் காரணமாக, சீன மக்கள் செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். இதனால், புக்கெட் தீவுக்குச் செல்லும் சீன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு, சீன நாணயத்திற்கு நிகராக தாய்லாந்தின் பாட் நாணய மதிப்பு 10 விழுக்காடு உயர்ந்திருப்பதும் மற்றொரு காரணம்.
கடந்த ஆண்டு ஜூலையில் புக்கெட் தீவு கரையோரம் ஏற்பட்ட படகு விபத்தில் சீனாவைச் சேர்ந்த 47 சுற்றுப்பயணிகள் உயிரிழந்த சம்பவமும் சுற்றுப்பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிற்கு பிறகு, கடந்த ஆண்டு சுற்றுப்பயணிகள் அதிகமானோர் சென்ற இடம் புக்கெட் தீவு. பொதுவாக, அங்கு செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, தாய்லாந்து சுற்றுப்பயணத் துறையின் நிலை மதிப்பிடப்
படுகிறது.
தாய்லாந்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுப்பயணத் துறையின் பங்களிப்பு 18 விழுக்காடு. அந்நாட்டிற்கு வரும் ஒட்டுமொத்த பயணிகளில் ஏறத்தாழ 25 விழுக்காட்டினர் சீனாவிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு சீனாவிலிருந்து 2.2 மில்லியன் பேர் தாய்லாந்துக்கு வருகை புரிந்தனர். ஆனால், இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை அந்த எண்ணிக்கை 20 விழுக்காடு குறைந்தது.
புக்கெட் தீவைத் தவிர்த்து, கடற்கரையோரம் அமைந்துள்ள பட்டாயாவிலும் ஹோட்டல் கட்டணம் குறைந்துள்ளது.
இந்திய சுற்றுப்பயணிகளை நாடும் தாய்லாந்து
இந்நிலையில், தாய்லாந்தின் சுற்றுப்பயணத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுசெய்யும் நோக்கில், பயண முகவைகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளை ஈர்க்க முயற்சி செய்து வருகின்றன.
இந்தியாவில் நடுத்தர வகுப்புப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே நேரடி விமானச் சேவைகள் இருப்பது உள்ளிட்ட அம்சங்களைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள தாய்லாந்து சுற்றுப்பயணத் துறை முற்
படுகிறது.
இவ்வாண்டு இரண்டு மில்லியன் இந்திய சுற்றுப்பயணிகளின் வருகையை தாய்லாந்து எதிர்பார்க்கிறது. இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் தாய்லாந்துக்கு வருகை புரிந்த இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க 25% கூடியது.

